அறிமுகம்

 

2009.07.29(about)001

கணபதியே ஓம் கணபதியே

நன்றி : இணையம்

“திங்கள் முடி சூடு மலை! தென்றல் விளையாடு மலை!
தங்கு முகில் சூடு மலை ! தமிழ் முனிவன் வாழு மலை!

எனப் புகழ் பெற்று  விளங்கும் தமிழ் மலையாம் பொதிகை மலை.

வலைப்பதிவுக்குப் பொதிகை எனப் பெயர் சூட்டக் காரணம்:

தமிழ் வளர்ந்த இடமாகக் கருதப்படும் பொதிகை மலையின் மகிமை கருதியும், அங்கு தமிழை வளர்த்த மாமுனிவரின் சிறப்புக் கருதியும், அகத்திய மாமுனிவருக்கும் தெட்ஷணகைலாயம் எனப் போற்றப்படும் திருக்கோணேஸ்வரத்துக்கும் உள்ள தொடர்பினைக் கருத்தில் கொண்டே எமது வலைப்பதிவு பொதிகை எனப் பெயர் பெறுகின்றது.

தமிழ் மொழியில் முதலில் தோன்றிய நூலாக அகத்தியம் விளங்குகின்றது. சிவனின்  ஆணைப்படி தென்கைலைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கியிருந்த பொழுது முருகப்பெருமானின் அருள் வாக்குக்கு இணங்க இந் நூலை இயற்றி அருளி அதற்கு இலக்கணமும் வகுத்தார். இத் தெய்வத் தமிழ் மொழி வளர்ந்த இடம் பொதிகை. இதனைக் கருத்தில் கொண்டும் எமது இணையத்தளம் பொதிகை எனப் பெயர் பெறுகின்றது.

எமது வலைப்பதிவு 02.09.2009  முதல்  பொதிகை எனும் பெயர் தாங்கி அமிழ்தினும் இனிய தமிழ் விரும்பும் அன்பர்களாகிய உங்களுடன் பொதிகைமலைத் தென்றலாக இணைய வலைப்பின்னலின் ஊடாக வீசுகின்றது.

 

அகத்திய முனிவர், திருகோணமலை, பொதிகைமலை என்பவற்றிற்கு உள்ள தொடர்பினைக் காட்ட “திருக்கோணாச்சலவைபவம்” என்றும் நூலில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்கள்:

சிவபொருமான், பார்வதியின் திருகல்யாணத்துக்கென தேவர்களும், முனிவர்களும், கணத்தவர்களும் திருக்கைலாயத்தில் வந்து கூடினார்கள். அவ்வேளை வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அது கண்ட தேவர்கள் எல்லாம் அச்சம் கொண்டு சிவபெருமான் முன்சென்று, சுவாமி! உத்தரம் தாழ்ந்து தஷ்சணம் உயர்ந்த படியால் எமக்கு ஆச்சரியமாகவும், அச்சமாகவும் உள்ளது. இந்த ஆபத்தை தேவரீர் நீர் தம் போக்கியருள வேண்டும் என வேண்டினர். உடனே சிவபெருமான் விஸ்ணுவை நோக்கி நமது திருமணக்கோலம் காணும் பொருட்டு சப்த சமுத்திரங்களையும் குடங்கையில் அடக்கிய அகத்திய முனிவன் இவ்விடம் வந்தமையால் தான் உத்தரம் தாழ்ந்து, தட்ஷணம் உயர்ந்து விட்டது. ஆகையால் அம்முனிவனை நம்மிடம் அழைத்து வாரும் எனப் பணித்தார். அப்போது சிவன் அகத்தியரை நோக்கி! பூமி, அந்தரம், சுவர்க்கம் எனும் மூன்று உலகத்திலும் உனக்கு மேற்பட்ட முனிவரை நாம் கண்டதில்லை. நீ இப்பொழுது எமது திருமணக் கோலம் காணும் பொருட்டு இவ்விடம் வந்தமையால் உத்தரம் தாழ்ந்து தட்ஷணம் உயர்ந்து விட்டது. ஆகையால் நீ இவ்விடம் விட்டு உனது வாசஸ்தலமாகிய் பொதிகைமலைக்குப் போய்விட வேண்டும்.ஆனால் தட்ஷணகைலாயத்தில் உள்ள மகாவலிக்கு அருகாமையில் உள்ள கரசையம்பதியிலும், மறைசைப்பதியிலும் நமது திருமணக் கோலகக் காட்சி பெறுவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட அகத்திய முனிவர் மிகுந்த சந்தோசத்துடன் அவ்விடம் விட்டு நீங்கினார். அப்பொழுது எத்தரம் தட்ஷணம் இரண்டும் தராசு நுனி போன்று பேதம் இல்லாது இருந்தன.  அதன் பின்பு சிவபெருமான் திருமணக் கோலம் கொண்டு சகல தேவர்களும் புடைசூழ்ந்து வர இமயப்பருவதத்துக்குச் சென்று பார்வதி இராஜகுமாரியைத் திருமணம் முடித்து, தேவி சமேதராக இடரூபராகி திருக்கைலாயத்தில் வீற்றிருந்து அருளினார்.

பின்பு அகத்திய முனிவர் தட்ஷண திசைக்குப் போகும் போது ஆகாயம் வரை அளாவி நின்று தவத்தவர்களுக்கு துன்பம் செய்யும் கிரவுஞ்சனெனும் அசுரனுக்கு சாபமிட்டும் அப்பாற் சென்று தமக்கு வன்சனை செய்த வில்லவன், வாதாபி என்னும் இருவரையும் கொன்றும் இன்னும் அனேக அற்புதங்களை உலகத்தவர்கள் காணும் படி செய்தும் காசி முதலிய புண்ணியஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும் ஈழ நாடாகிய இலங்கையை அடைந்து உத்தரகைலாயத்திலே திருமணக் கொண்டாட்டம் இருப்பதால் தட்ஷண கைலாசம் ஆகிய திருக்கோணமலையிலும் அக்கொண்டாட்டம் இருக்கும் ஆகையால் திருக்கோணமலைக்குச் சென்று கோணநாயகரைத் தரிசிக்க இதுகாலமல்லவென்று நினைத்துத் திருக்கோணமலைக்கு முக்காத வழியில் உள்ள கழனிமலையை அடைந்து சிவபெருமானை பூசை செய்து கொண்டிருந்தார்.

அன்னாள் துவக்கம் கழனிமலைக்கு திரிகோண கண்டவரை என்னும் ஒரு நாமம் உண்டானது. அதன் பின்பு மகாவலி கங்கையானது சிவனொளிபாதமலையில் அருந்து உற்பத்தியாகி சமனாசைலதடதை வலப்பிரதஷணஞ் செய்து கொண்டு திருக்கோணமலைக்கு வந்து கோணநாயகருடைய திருப்பாதங்களை விளக்கிச் செல்வதை அகத்திய முனிவர் கண்டு இக்  கங்கை மிகவும் பெருமை உடையதாய் இருப்பதால் இதிலே ஸ்நானம் பண்ண வேண்டும் என்று கருதி மகாவலி கங்கையை அடைந்து, தண்டு கமண்டலம் முதலியவற்றை கையிலே வைத்து கங்கையில் இறங்கி ஸ்நானம் செய்யும் போது ஒர் அசரீரி வாக்கு சொன்னதாவது “முனிவனே! இந்த மகாவலி கங்கைக்கு நிகரான தீர்த்தம் எவ்விடத்திலும் கிடைப்பது அரிது. ஆகையால் இக்கங்கையில் வந்து தீத்தமாடும் நமது அடியார்கள் எம்மை எப்போதும் தரிசிக்கும் பொருட்டு திருகோணமலைக்குத் தென்பக்கமாகவும் சிவனொளிபாத மலைக்கு வட பக்கமாகவும் மகாவலி கங்கையின் கிழக்குப்  பக்கமாகவும் மிகுந்த பெருமிதங்களைப் பொருந்திய கரைசையம்பதி என்னும் இடத்துக்குச் சென்று அவ்விடத்திலே நம்மை நினைப்பாயாக என்று சொல்லியது” அசரீரி வாக்குச் சொல்லிய யாவற்றையுங் கேட்டு நின்ற அகத்திய முனிவர் ஆனந்தப் பரவசம் கொண்டு, சில நாழிகைகள் அவ்விடத்தில் நின்று, கோணநாயகரை நோக்கிப் பலவாறாக தோத்திரங்களைச் சொல்லித் துதித்துக் கொண்டு பின்பு கரசையம்பதியை அடைந்து, அவ்விடத்தில் விசுவகர்மாவை அழைத்து, அவனை நோக்கி இவ்விடத்திலே பிள்ளையார், சிவபொருமான், உமாதேவியார், சுப்பிரமணியர், சண்டேஸ்வரார் முதலிய தேவர்கள் எழுந்தருளி இருக்கும் பொருட்டு அலங்காரமான ஆலயங்களையும், இடபம், பலிபீடம், துவச ஸ்தம்பம் முதலிய வகைகளையும் சீக்கிரம் உண்டுபண்ணுவாயாக என்று சொன்னார். அதைக் கேட்ட விசுவகர்மா கோணநாயகரின் திருக்கிருபையாலே விசித்திரமான ஆலயங்கள், மண்டபங்கள், திருமடைப்பள்ளி முதலியவைகளை உண்டு பண்ணி தேவர்களும் அதிசயிக்கும் படியான ஐந்து திரு வீதிகளையும் உண்டு பண்ணினான். அதனைக் கண்டு அகத்தியர் மிகுந்த சந்தோஷம் அடைந்து, சிவலிங்கப் பெருமான் முதலிய தேவர்களை அவர்களுக்கு உண்டு பண்ணப்பட்ட ஆலயங்களிலே தாபித்து, பஞ்ச சுத்தி செய்து, மகுடாகமத்தில் சொல்லிய பிரகாரம் மகாவலி கங்கைத் தீர்த்தத்தினாலே மகாநியாச புருவமாக அபிஷேகம் செய்து, சோடா உபசாரங்களால் பூசித்து, சிவலிங்கப் பெருமானுக்கு தீர்த்தேஸ்வரன் என்னும் திருநாமமும் கொடுத்து, சாட்டாங்க பூர்வமாக நமஸ்கரித்து, தோத்திரம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது சிவபெருமான் பாலவயது உள்ளவராயும், சந்திரனை அணிந்தவராயும், உமாதேவி சமேதராக திருமணக்கோல் வடிவு கொண்டு, ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்தின் நின்றும் பிரசன்னப்பட்டும் அகத்திய முனிவருக்குக் காட்சி கொடுத்தார். அதனைக் கண்ட அகத்திய முனிவர் ஆனந்தங் கொண்டு உரோமம் சிலிக்க ஆனந்த அருவி சொரிய பல தரமும் சிவனின் திருப்பாதங்களை நமஸ்கரித்து எழுந்து, சுவாமி! இந்தக் கோலத்துடன் இவ்விடத்தில் சதாகாலமும்  இருந்து, மகாவலி கங்கையில் வந்து தீர்த்தமாடி தேவரீரைத் தரிசிக்கின்றவர்களுக்கு கிருபைபாலித்து அருள வேண்டும் என்று பிராத்தித்தார். அப்போது, சிவபெருமான் அகத்திய முனிவனைப் பார்த்து முனிவனே! நீ கேட்ட பிரகாரம் என்று திருவாய் மலர்ந்தருளி சிவலிங்கத்தே மறைந்தருளினார். அதன் பின் அகத்திய முனிவன் திருகோணமலையினை அடைந்து பாவநாசத் தீர்த்தத்தில் ஸ்தானம் செய்து கோணநாயகரையும், அன்ன மென்நடை அன்னையையும் தரிசித்துக் கொண்டு அவ்விடம் விட்டு புறப்பட்டு திருக்கேதீச்சரத்தை அடைந்து பாலாவிக் குளத்தில் ஸ்தானம் செய்து கேதீஸ்வரரையும், கௌரி அமமையையும் தரிச்சித்து அவ்விடத்திலே ஹீகண்டர் என்னும் ஒர் நாமம் உள்ள லிங்கத்தைத் ஸ்தாபித்து சில நாட்கள் அவ்விடத்தில் இருந்து பூசை செய்து பின்பு சிவபெருமானிடத்தில் வேண்டிய வரங்களையும் பெற்றுக் கொண்டு சோளநாட்டை  அடைந்து வேதாரணியத்திலும் சிவபெருமான், உடையின் திருமணக் கோலத்தினையும் தரிசித்துக் கொண்டு பொதிகை மலைக்குப் போனார்.

மூலம்: அகிலேசபிள்ளை.வே., (1950), “திருக்கோணாச்சலவைபவம்”, தத்துவ ஞானத் தவச்சாலைப் பிரசுரம், இலங்கை – பக் (12-14)

பொதிகை  வலைப்பதிவின் முகப்புப் படத்தினுள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள்:

அகத்திய முனிவர், பொதிகைமலை, திருகோணமலை என்பவற்றிற்கு இருக்கும் தொடர்பினைக் காட்டவும் , இந்து மக்களின் பூசைக்குரிய பூக்களில் மிகவும் உயர்ந்தது தாமரைப்பூ என்பதை விளக்கவுமாக பொதிகை வலைப்பதிவுக்கான முகப்புப்படம் இவ்வாறு பல அம்சங்களின் தொகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதிகை வலைப்பதிவின் பிறப்பிடம்:

தமிழ் பிறந்த இடம் பொதிகைமலை. எமது வலைப்பதிவான பொதிகை பிறந்தது இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலாகும் .

மூலம்:  GIS Map Work.

பொதிகை வலைப்பதிவில் உள்ள அனைத்துத் தொகுப்புக்களும் ஒரே பார்வையில்……………

வணக்கம்

_/\_  ஓம் சிவாயநம ஓம் _/\_

தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பேசாதே


Advertisements

11 Responses to அறிமுகம்

 1. Vim says:

  நன்மை பயக்கும் பதிவுகள்

 2. Nava says:

  இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளை சிலர் முழுமையாக பிரதி செய்து தங்களின் பெயரில் கைப்குறிப்பேடுகளையும், இணையத்தளத்திலும் வெளியிடுகின்றனர். அவ் இணையத் தளத்தின் முகவரி http://palmunaiyouth.blogs.lk/
  இதனைக் கவனத்தில் கொள்ளவும்.

 3. Rosana Benad says:

  Thanks for your Tsunami Warning Center web link. thanks a lot

 4. Sanchu says:

  அனைத்துப் பதிவுகளும் மிக்க அருமையாக உள்ளன…
  பொதிகை மேலும் மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்!!!

 5. Thangavel says:

  Use full web. best wishes pothikai.

 6. Navalojanan says:

  அனைத்து அருமையாக உள்ளன…
  பொதிகை மேலும் மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: