வறுமையும் பால்நிலையும்

August 25, 2012

வறுமையும் பால்நிலையும்

Poverty and Gender

தொகுப்பு

01.    அறிமுகம்

02.    வறுமைச் சக்கரம்

03.    ஆய்வுப்பிரதேசமும் இட அமைவும்

04.    ஆய்வுப்பிரச்சினைகள்

05.    ஆய்வின் நோக்கம்

06.    ஆய்வின் நுட்பம்

07.    வறுமைக்கான காரணங்கள்

08.    வறுமையிலிருந்து விடுபட மக்கள் தெரிவித்த கருத்துக்கள்

09.    ஆய்வுப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படப் பிரதிகள்

10.    வறுமையை குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்

11.    முடிவுரை

உசாத்துணை நூற்கள்

01.    அறிமுகம்

இன்றைய உலக மயமாக்கல் சூழலில் பல நாடுகள் குறிப்பாக வளர்முக நாடுகளின் அதிகரித்த சனத்தொகை பெருக்கத்தின் காரணமாக வருமானப் பரம்பலானது சமனற்ற முறையில் காணப்படல், வேலையின்மை, வளங்களின் பற்றாக்குறை, தேசிய வருமானக் குறைவு, போன்ற சமூக, பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன. ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டுமாயின் அந்நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியும் விஸ்தீரணமும் தொடர்ச்சியாக ஏற்பட வேண்டும். உலகின் அநேகமான நாடுகள் துரிதமாக அபிவிருத்தியடைந்த நாடுகளாகவே மாற விரும்புகின்றன. அவ்வாறு அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் ஒவ்வொரு நாடும் தங்களது சமூக, பொருளாதார நிலைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எனவே தான் சமூக, பொருளாதாரம் ஒரு முக்கியம் வாய்ந்த விடயமாக கருதப்பட்டு அனைத்து நாடுகளும் அதில் அக்கறையுடன் செயல்படுகின்றன.

இலங்கை ஒரு அபிவிருத்தியடைந்து வரும் நாடு மட்டுமல்லாமல் வறுமையின் அளவு அதிகரித்த ஒரு நாடாகவும் காணப்படுகின்றது. இதற்கு சமூக பொருளாதார காரணிகளே செல்வாக்கு செலுத்துகின்றது. இலங்கையில் நகரத்தை விட கிராமியத் துறையில் வறுமையின் வீதம் உயர்வாகக் காணப்படுகின்றது. கிராமிய வறுமையில் பாதிக்கப்பட்டோரின் அளவு 28 – 33 % காணப்படுகின்றது. கிராமிய வறுமையிலும் ஏறத்தாழ 45% மக்கள் விவசாயத் துறையை நம்பி வாழ்கின்றனர். இலங்கையில் வறுமைக்கான மூல காரணமாக இருப்பது வேலையின்மையாகும். அதன் அடிப்படையில் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்டங்களில் மிக தீவிரமாக வறுமை நிலை ஏற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்முனை தமிழ் பிரிவில் உள்ள பல கிராமங்கள் அதிகரித்த வறுமையினை எதிர்நோக்கி வருகிறது. இப்பிரதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் போன்ற பல்லின மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் மக்களின் தொழிலாக மீன்பிடி, வீட்டுத் தோட்டம், மற்றும் விவசாயம், மேசன், தச்சு என்பன காணப்படுகின்றன. இத்தொழில் நிலைகளின் அளவைப் பொறுத்தும் அவை கிடைக்க பெறும் தன்மையைப் பொறுத்தும் இங்கு வறுமை தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக சமூக, பொருளாதாரம் என்னும் போது குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும் மக்கள் எவ்வாறான சமூகப் பொருளாதார நிலையில் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர். என்பது பற்றியதாகும். ஒரு சமூக பொருளாதார நிலை பற்றிய சமூக காரணிகள், பொருளாதாரக் காரணிகள் என்பவற்றை கண்டறிந்து அவற்றின் வளர்ச்சிப் போக்கு பற்றி அவதானிப்பதன் மூலமே அறிய முடியும். அவ்வாறான குறிகாட்டிகளாக வருமானம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சேமிப்பு, முதலீடு, வீடமைப்பு போக்குவரத்து போன்ற பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

02. வறுமைச் சக்கரம்

வறுமையானது மக்கள் மத்தியில் ஒரு நச்சுவட்டம் போல் சுழன்று  கொண்டிருக்கின்றது. இது மக்களின் வாழ்க்கைத்தரக் குறைவுக்கு ஒரு செயன்முறையினூடாக மீண்டும் மீண்டும் காரணமாகிறது. வாழ்க்கைக் குறைவு காரணமாக சேமிப்பு குறைவு ஏற்படுகிறது. சேமிப்புக் குறைவானது மூலதனக் குறைவையும், அதனால் முதலீட்டுக் குறைவையும் ஏற்படுத்துகிறது. முதலீட்டுக் குறைவானது உற்பத்தி நடவடிக்கைகளில் போதிய முதலீட்டைப் பெற்றுக் கொள்ள முடியாமையினால் உற்பத்தி குறைவு ஏற்பட்டு, அது மெய் வருமான குறைவுக்குக் காரணமாகி மீண்டும் வாழ்கைத் தரக் குறைவினை ஏற்படுத்தி, ஒரு வட்டம் போன்று செயற்படுகின்றது. பின்வரும் படம் நச்சு வட்ட செயன்முறையைக் காட்டி நிற்கிறது.

03.    ஆய்வுப்பிரதேசமும் இட அமைவும்

அம்பாறை மாவட்டம் 19 பிரதேச செயலக பிரிவுகளைக் கொண்டுள்ளது. கல்முனை பிரதேசமானது குறிப்பாக தமிழ், முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளாகக் காணப்படுகினறது. விவசாயத்தினையும் மீன்பிடியையும் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளதொரு பிரதேசமாகும். இப்பிரதேசம் நீண்ட கடற்கரையையும், வளமான மண்ணையும் கொண்டுள்ளது. கல்முனை பிரதேசத்தின் மொத்த பரப்பளவு 6687 ஹெக்ரெயர் ஆகும். இதில் கல்முனை தமிழ், முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குடியிருப்பாளர் நிலப்பரப்பு 1960 ஹெக்ரெயர் ஆகும்.

இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிரதேச செயலகப் பிரிவு கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவாகும். கல்முனை பிரதேச செயலகர் பிரிவு வடக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு கிராமத்தையும், தெற்கே மாளிகைக்காடு கிராமத்தையும, கிழக்கே கடலையும் மேற்கே சம்மாந்துறை செயலாளர் பிரிவையும் எல்லையாக கொண்டதே கல்முனை பிரதேச செயலகமாகும். மேலும், 59 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டது. இதில் தமிழ் பிரதேசம் ஆனது 35 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.


04.    ஆய்வுப்பிரச்சினைகள்

ஆய்வுக்கு உட்பட்ட கல்முனை பிரதேசம் வறுமை நிலையில் காணப்படுகின்றது. இந்த வறுமை நிலையானது கல்முனை தமிழ்ப்பிரிவில் 73.38% ஆகவும், முஸ்லிம் பிரிவில் 57.68% ஆகவும் காணப்படுகின்றது. எனவே இவர்களின் வாழ்க்கை தர அபிவிருத்தி என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முக்கிய பௌதீக வளங்கள் காணப்பட்ட போதும் வாழ்க்கை நிலை பின்தங்கியதாகக் காணப்படுகின்றது.

ஆய்வு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றன.

 • 01.    வேலையற்றோர் வீதம் அதிகரித்து காணப்படல்
  02.    மக்களிடையே காணப்படும் சமனற்ற வருமானப்பரம்பல்
  03.    வீட்டு வசதியின்மை
  04.    சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
  05.    உயர் கல்வியை பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகள்

05.    ஆய்வின் நோக்கம்

ஆய்வுப்பிரதேசத்தில் நிலவும் வறுமை நிலைக்கான காரணங்களையும், அதனால் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் கண்டறிந்து அப்பிரதேசத்தில் வறுமையை குறைப்பதற்கான ஆலோசனைகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ளல். மேலும் இவ் ஆய்வின் நோக்கங்களாக பின்வருவன அமைகின்றது.

1)    வறுமையினால் ஏற்படும், சமூக பொருளாதார, கலாசார, பாதிப்புக்களை மதிப்பீடு செய்தல்.
2)    வறுமையை குறைப்பதற்கு தீர்வுகளை முன்வைத்தல்.
3)    மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அக்கிராமம் வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றவும் தேவையான நுட்பங்கள் நடை முறைகளைக் கண்டறிந்து முன்வைப்பதும் அவற்றை செயல்படுத்த தேவையான வழி வகைகளையும் ஆலோசனைகளையும் வழங்கல்

06.    ஆய்வின் நுட்பம்

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் சமூக பொருளாதார நிலைமைகள் தொடர்பாக தரவுகளை சேகரித்தல், அவற்றை வகைப்படுத்தல், ஒழுங்கு படுத்தல், பகுப்பாய்வு செய்தல், என்ற நுட்பங்களை கையாளலாம். இவ்வகையில் ஆய்வினை மேற்கொள்ளும் போது பல்வேறு வழிகளில் தரவுகள்

சேகரிக்கப்படுகின்றன. அவை முதலாம் நிலைத் தரவு, இரண்டாம் நிலைத் தரவு, மூன்றாம் நிலைத் தரவு என்பனவாகும்.

முதலாம் நிலைத் தரவுகளை பொறுத்தவரை கிராமங்களின் சமூக பொருளாதார நிலை பற்றிய தெளிவான தரவுகளை பெறுவதற்கு வினாக்கொத்துக்களை பயன்படுத்தி அவற்றைப் பூரணப்படுத்துவதன் மூலமாகவும் நேர்காணல் அடிப்படையிலும் நேரடி அவதானிப்பின் மூலமாகவும் தரவுகளைத் திரட்ட முடியும்.

இரண்டாம் நிலைத் தரவுகளை பொறுத்தவரையில் திணைக்களங்கள் போன்றவற்றின் வாயிலாகவும் இவை தொடர்பான தரவுகளை திரட்டியவர்கள் மூலமாகவும் பெறலாம். அத்துடன் மூன்றாம் நிலை தரவுகள் பதிவேடுகள் மூலமாகவும் பெற்றுக்  கொள்ளலாம். இம் மூன்று முறைகளில் ஒன்றான முதலாம் நிலை தரவுகளின் அடிப்படையில் கல்முனை தமிழ் பிரதேசத்தில் வாழும் மக்களிடையே நிலவும் சமூக, பொருளாதார நிலையை அறிந்து கொள்ளலாம்.

07.    வறுமைக்கான காரணங்கள்

ஆய்வுப்பிரதேசத்தில் நிலவும் வறுமையினை அடையாளம் கண்டு கொண்டதன் பின்னர், அவ்வறுமைக்கான காரணங்கள் எவை என ஆய்வுக்குட்படுத்திய மக்களிடம் வினாவிய போது அவர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்தார்கள். அந்தவகையில் 30 வீதமான மக்கள் தமது வறுமைக்கு மூல காரணமாக இருப்பது, நிரந்தரமான தொழில் இன்மை ஆகும் எனத் தெரிவித்தனர். இதற்கு அடுத்த படியாக 21.2 வீதமான மக்களின் வறுமைக்கு போதிய வருமானம் இல்லாமையும், 21.8 வீதமான மக்களின் வறுமைக்கு இடப்பெயர்வும், 13.8 வீதமான மக்களின் வறுமைக்கு குடும்பத் தலைவரின் மரணமும், ஏனைய மக்கள் ஏனைய காரணங்களையும் தமது வறுமைக்கு பொறுப்பாக உள்ளது எனத் தெரிவித்தனர். பின்வரும் அட்டவணை மூலம் இதனைக் காட்டலாம்.

08.    வறுமையிலிருந்து விடுபட மக்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆய்வுக்குட்படுத்திய மக்களிடம் தாங்கள் வறுமையிலிருந்து விடுபட எவ்வாறான நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் எதிர்பார்க்கின்றீர்கள் என வினாவிய போது, அவர்களில் பெரும்பான்மையினர் அதாவது 30 வீதமானவர்கள்  வறுமையிலிருந்து விடுபட சுயதொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் எனக் கூறினர். 50 வீதமானவர்கள்  வறுமை தொடர்பான விடயத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும் எனவும், 12 வீதமான மக்கள் அடிப்படைத் தேவைகளில் விருத்தியை ஏற்படுத்தல் வேண்டும் எனவும், அடுத்த 8 வீதமான மக்கள் பாரிய வர்த்தக விருத்தியை ஏற்படுத்தல் வேண்டும்.

எனவே ஆய்வுப் பிரதேச மக்களின் சமுக, பொருளாதார நிலமைகளை அறிந்து கொண்டதோடு, அவர்களது சமூக, பொருளதார தேவைகளில் நிலவும் பிரச்சினைகளையும் அறிய முடிகின்றது. அதாவது மக்கள் தாம் பெறுகின்ற வருமானத்தினைக் கொண்டு தமது தேவைகளை பூரணமாக நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளார்கள். இதனால் ஏனையவர்களிடம் தங்கி வாழ்வதோடு, கடன்பட்டு வாழ்கின்ற நிலமையும் உருவாகின்றது.  தமது சமூக, பொருளாதாரத் தேவைகளை செவ்வனே நிறைவேற்ற முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர் என்பதை எனது ஆய்வின் மூலம் தெரியவருகின்றது.

10.வறுமையை குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.

நுகர்வு வறுமையைக் குறைத்தல், மற்றும் வறியவர்களுக்கு வலுவூட்டுதல் என்பவற்றை இலக்காகக் கொண்ட நேரடித் தலையீடுகள் பிரதானமாக இருவகையில் அடங்குகின்றது. ஓன்று, சுயதொழில் செயற்திட்டங்களுடாக வறியவர்கள் தமது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும், அதனூடாக வறுமையினைப் போக்கிக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் அடிப்படையிலான அணுகுமுறைகள். அடுத்ததாக, வறியவர்கள் தம்மைத் தாமே அணிதிரட்டி கூட்டாகச் செயற்பட்டு வருமானங்களை உயர்த்திக் கொள்ளும் திசையில் முன்நோக்கிச் செல்வதற்கு உதவி வளங்குவதனை நோக்காகக் கொண்ட குழு அடிப்படையிலான அணுகுமுறைகள்.

பொருளாதாரக் கோட்பாடுகளின் நியதிகளின் பிரகாரம், குழு  அடிப்பபடையிலான அணுகுமுறைகள் பல சாதகமான கூறுகளைக் கொண்டுள்ளன. மோசமான பொருளாதார இணைப்புக்கள், மற்றும் போக்குவரத்துத் தொடர்பாடல் இணைப்புக்கள்  காரணமாக கிராமியச் சந்தைகள் துண்டு துண்டாகப் பிரிந்து வேறுபட்டிருக்கும் நிலையில் தோன்றும். பூரணமற்ற சந்தைகள் ஏகபோக நிலைகளில் எழுச்சிக்கு வழிகோலுகின்றன. இவர்கள் ஒரு பொட்டிச்சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்வதிலும் பார்க்க, குறைந்த விலைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர். மேலும் இத்தகைய குழு அடிப்படையிலான அணுகுமுறைகள் உண்மையிலே கொடுக்கல் வாங்கல் செலவுகளை குறைப்பதுடன் உச்சமட்ட அனுகூலங்களையும் எடுத்து வருகிறது.

11.முடிவுரை

சமுகரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் போது பிரதேசரீதியான அறிவும், அங்கு காணப்படும் பிரச்சினைகளும், அவற்றுக்கான தீர்வாலோசனைகளும் மிக முக்கியமாக கருதப்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் சமுக நோக்கற்றதாகவும், திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற மனப்பான்மையும், பிரதேசத்தில் கணப்படும் வளர்ச்சியற்ற குறிகாட்டிகளைக் கருத்திற் கொள்ளாமல் இடம்பெறுவதனால் குறிப்பிட்ட இலக்கினை அடைவதில் சிக்கல்நிலை தோன்றக் காரணமாக அமைகின்றது. அந்தவகையில் வறுமைக் குறைப்பு தொடர்பான செயத்திட்டங்களில் பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்வது திட்டத்தின் பயனை நீடித்து பிரதேசமக்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

வறுமைக்கான திட்டமிடலின் போது, பிரதேசத்தில் கிராமிய அபிவிருத்தி நிறுவங்கள் கவனிக்கத் தவறிய விடயங்களை இனங்கண்டு செயத்திட்டங்களை செயற்படுத்தல்.

வாழ்வாதாரச் சலுகைகளின் தேவைகளை இனங்காணல், வறிய மக்களை இனங்கண்டறிதல், வாழ்வாதாரச் சலுகைகளை வழங்கக்கூடிய துறைகளை இனங்கண்டு அதற்கான கொள்கைத்திட்டமிடல்களை மேற்கொள்ளல்.

கொள்கைத்திட்டமிடல், பௌதீக வளங்களின் உதவியுடன் அதுசார் தொழில்த் துறைகளை முன்னேற்றுதல். இதiனை கிராமிய மட்டத்திலான சங்கங்களினூடாக முன்னெடுப்பது எனும் அடிப்படையில் அமையவேண்டும்.

நுண்பொருளாதார வாய்ப்புக்களை இனங்கண்டு வறியவர்களின் வருமானத்தை கூட்டிக்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றுதல்.

திட்டமிடலில் உள்ளுர் அமைப்புக்களின் பங்களிப்பு மிகமுக்கியமாக கருதப்பட வேண்டும். இதன்மூலமே நிதியானது அச்சமுதாயத்தின் பொருளாதார நிலைகளில் மீழ்சுழற்சிபொறும் வய்ப்;பினை வழங்குதல்.

வெளியிலிருந்தான மனிதவளப் பாச்சலானது உள்ளுர் மட்டத்தில் தொடர்ந்தும் வறுமைநிலையில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது போகலாம். திட்டமிடல் நடவடிக்கையில் வறியமக்களின் பங்களிப்புக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்;.

இவ்வாறான நோக்கமுள்ள திட்டமிடல் நடவடிக்கைகளை அரச, மற்றும் அரசு சாராத நிறுவனங்களிலும், மற்றைய ஆய்வு நிறுவனங்களிலும் அமையப்பொறுவது ஆய்வுப் பிரதேச வறுமையின் நிலைப்பாட்டினையும் அதன் உள்ளார்ந்த தன்மையிலும் மாற்றங்களை கொண்டுவரும் ஒன்றாக காணப்படடாலும். ஏற்கனவே செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் தோல்விக்கான காரணங்களையும் சேர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.

உசாத்துணை நூற்கள்

 • ADAMS, D.W. and PISCHKE, J.D. VON (1992) Microenterprise credit programs: deja vu, Worm Development, 20, pp. 1463-1470.
 • ADAMS, W.M. (1992) Green Development: Environment and Sustainability in the Third World. London: Routledge.
 • ADB (ASIAN DEVELOPMENT BANK) (1992) Annual Report 1992. Manila: Asian Development Bank. .
 • ASHRAF, J. and ASHRAF, B. (1993) Estimating the gender wage gap in Rawalpindi City, Journal of Development Studies, 29, 365-376.
 • BAUD, I.S.A. (1993) Forms of Production and Women’s Labour: Gender Aspects of Industrialisation in India and Mexico. London: Sage.
 • BERGER, M. (1989) Giving women credit: the strengths and limitations of credit as a tool for alleviating poverty, World Development, 17, pp. 1017-1032.
 • BOURGUIGNON, F., MELO, J. DE and MORRISSON, C. (1991) Poverty and income distribution during adjustment: issues and evidence from the OECD project, World Development, 19, pp. 1485-1508.
 • BROMLEY, R. and GERRY, C. (Eds) (1979) Casual Work and Poverty in Third World Cities. Chichester:
 • CORBRIDGE, S. (1991) The poverty of planning or planning for poverty?: An eye to economic liberalization in India. Progress in Human Geography, 15, pp. 467–476.
 • CORNIA, G.A., JOLLY, R. and STEWART, F. (Eds) (1988) Adjustment with a Human Face. Oxford: Clarendon Press.
 • DAGENAIS, H. (1993) Women in Guadeloupe: the paradoxes of reality, in: J. MOMSEN (Ed.) Women and
 • GARZA, G. (1991) Dinamica industrial de la ciudad de Mexico, 1940-1988. Mimeograph.
 • GEFIJ, J.O. (1992) Part-time farming as an urban survival strategy: a Nigerian case study, in: J. BAKER and P.O. PEDERSEN (Eds), The Rural-Urban Interface in Africa: Expansion and Adaptation, pp. 295-302. The Scandinavian Institute of African Studies.
 • GEORGE, S. (1992) The Debt Boomerang: How Third World Debt Harms Us All. London: Pluto Press.
 • GILBERT, A.G. (1990) The provision of public services and the debt crisis in Latin America: the case of Bogota, Economic Geography, 66, pp. 349-361.
 • GILBERT, A.G. (1992) Third World cities: housing, infrastructure and servicing, Urban Studies, 29, pp. 435-160.
 • HELLEINER, G.K. (1992) The IMF, the World Bank and Africa’s adjustment and external debt problems: an unofficial view, World Development, 20, pp. 779-792.
 • JORGENSEN, S. GROSH, M. and SCHACTER, M. (Eds) (1992) Bolivia’s Answer to Poverty, Economic Crisis, and Adjustment: The Emergency Social Fund. Washington DC: The World Bank.
 • MACEWAN-SCOTT, A. (1986) Women and industrialisation: examining the female marginalisation hypothesis, Journal of Development Studies, 22, pp. 649-80.
 • MCGEE, T.G. (1976) The persistence of the protoproletariat: occupational structures and planning for the future of Third World cities, Progress in Geography, 9, pp. 3-38.
 • O’CONNOR, A.M. (1991) Poverty in Africa. Harlow: Longman.
 • OLIVEIRA, F. DE (1985) A critique of dualist reason: the Brazilian economy since 1930, in: R. BROMLEY (Ed.) Planning for Small Enterprises in Third World Cities, pp. 65-95. Oxford: Pergamon. First published in Portuguese in 1972.
 • PEARCE, D., BARBIER, E. and MARKANDYA, A. (1990) Sustainable Development: Economics and Environment in the Third World. Alder-shot: Edward Elgar.
 • REES, W.E. (1992) Ecological footprints and appropriated carrying capacity: what urban economics leaves out, Environment and Urbanization. 4, pp. 121-130.
 • REYNOLDS, C. (1988) The Mexican crisis: a comment, in: R. WESSON (Ed.), Coping with the Latin American Debt, pp. 61-65. New York: Praeger.
 • RHYNE, E. and OTERO, M. (1992) Financial services for microenterprises: principles and institutions, World Development, 20, pp. 1561-672.
 • RIBE, H., CARVALHO, S., LIEBENTHAL, R. ET AL., (1990) How adjustment programs can help the poor: the World Bank’s experience. World Bank Discussion Papers 71.
 • RODGERS, G. (Ed.) (1989a) Urban Poverty and the Labour Market in Asia and Latin America. Geneva: International Labour Office.
 • RODGERS, G. (1989b) Introduction: trends in urban poverty and labour market access, in: G. RODGERS (Ed.) Urban Poverty and the Labour Market in Asia and Latin America, pp. 1-33. Geneva: International Labour Office.
 • WORLD BANK (1992b) Environment and Development in Latin America and the Caribbean: The Role of the World Bank. Washington, DC: World Bank.
 • WORLD BANK (1992c) Poverty Reduction Handbook. Washington DC: World Bank.
 • WRI/IIED/UNEP (World Resources Institute/ International Institute for Environment and Development/United Nations Environmental Program) (1988) World Resources 1988-89. New York: Basic Books.

http://en.wikipedia.org/wiki/Poverty

http://www.poverty.com/

http://www.sarpn.org/genderenergy/resources/cecelski/energypovertygender.pdf

http://www.undp.org/poverty/focus_gender_and_poverty.shtml

http://www.unifem.org/gender_issues/women_poverty_economics/

http://endpoverty2015.org/goals/gender-equity

http://www.adb.org/Documents/Books/Defining_Agenda_Poverty_Reduction/Vol_1/chapter_23.pdf

http://www.ruralpovertyportal.org/web/guest/topic/home/tags/gender

http://www.afdb.org/en/knowledge/publications/gender-poverty-and-environmental-indicators-on-african-countries/

http://www.ilri.org/PovertyGender

http://www.gender-budgets.org/uploads/user-S/11281100461Impact_of_Government_Budgets_on_Poverty_and_Gender_Equality.pdf

http://www.genderequality.com.cy/main/data/articles/pdf/library/sex%20and%20poverty/english/education%20and%20poverty.pdf

http://siteresources.worldbank.org/INTAFRREGTOPGENDER/Resources/gender_time_use_pov.pdf

http://www.siyanda.org/docs/cagatay_trade.pdf

http://www.iiav.nl/epublications/1997/Urbanisation_and_urban_poverty.pdf

http://eco.ieu.edu.tr/wp-content/GenderandPoverty.pdf

http://www.sarpn.org/documents/d0000306/P306_PRSP_Gender.pdf

Advertisements

தென்னை மரத்தின் கீழ் நடப்படும் நீண்டகால, குறுகியகாலப் பயிர்கள் பற்றிய ஓர் ஆய்வு

September 14, 2011

நிலாவெளி கிராம சேவகர் பிரிவில் தென்னை மரத்தின் கீழ் நடப்படும் நீண்டகால, குறுகியகாலப் பயிர்கள் பற்றிய  ஓர்  ஆய்வு

INTER  CROPPING  UNDER  COCONUT  TREES  IN  NILAVELI  G.N  DIVISION

The Research of   Tropical Agroforestry Systems –  Kuchchaveli Divisional Secretarial Division in Trincomalee  District

01. அறிமுகம்:

பயிர்ச்செய்கை, மிருக வளர்ப்பு முதலான விவசாய முயற்சிகள் மேற்கொள்ளும் காணிகளில் பொருளாதார சூழல் மேம்பாட்டிற்காக மரங்களை அல்லது வைரம் செறிந்த பல்லாண்டுத் தாவரங்களை நடுகை செய்து, பராமரிக்கும் காணிப்பயன்பாட்டு முறை விவசாய வனவளர்ப்பு முறை (Agro forestry) என்று வரைவிலக்கணப்படுத்தப்படும். (FAO 1991)

விவசாயக் காடாக்க முறைகளில் 29 வகைகள் காணப்படுகின்றது. அவ் விவசாயக் காடாக்கத்தின் மூலம் பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றது. விவசாயக் காடாக்க முறைகளில் ஒன்று தான் தென்னை மரத்தின் கீழ் நடப்படும் பயிர்கள் ஆகும். அதாவது தென்னை மரத்தின் கீழ் குறுகிகால நீண்டகாலப் பயிர்களை நடுதலைக் குறிக்கின்றது. இலங்கையில் தென்னை மரத்தின் கீழ் மரக்கறிவகைகள், வாழை, இஞ்சி, கோப்பி, அன்னாசி, வெற்றிலை, மஞ்சள் என்பன நடப்படுகின்றது.

02. ஆய்வுப் பிரதேசம்:

தென்னை மரத்தின் கீழ் நடப்படும் நீண்டகால, குறுகியகாலப் பயிர்களை ஆய்வு செய்வதற்கு நிலாவெளி கிராம சேவகர் பிரிவு தெரிவு செய்யப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப்பிரிவுகள் உள்ளது. அவற்றில் ஒன்று  குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவு ஆகும். அக் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 24 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளது. அவ் 24 கிராமசேவகர் பிரிவுகளில் ஒன்று  நிலாவெளி கிராம சேவகர் பிரிவு ஆகும். அக்கிராம சேவகர் பிரிவில் மூன்று கிராமங்கள் காணப்படுகின்றது. அம் மூன்று கிராமங்களும் ஆய்வுக்குத் தெரிவு செய்யப்பட்டது.

2.1 இட அமைவு:

நிலாவெளி கிராம சேவகர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து வடக்குப் பக்கமாக 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

2.2 தரைத் தோற்றம்:

திருகோணமலை மாவட்டமானது இலங்கையில் கரையோர மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆய்வுப் பிரதேசத்தின் தரைத்தோற்ற மாதிரியை எடுத்துக் கொண்டால், உயரம் குறைந்ததாகக் காணப்படுகின்றது.

2.3 மண் அமைப்பு:

மண் செங்கபில் நிற மண் ( Reddish Brown Earths)மண் எச்சங்கள், கார உவர் மண் போன்ற அமைப்புக்களே காணப்படுகின்றது.

2.4 காலநிலை:

வெப்பநிலை, மழைவீழ்ச்சி என்பனவற்றின் அடிப்படையில் ஆய்வுப் பிரதேசம் இலங்கையின் வரண்ட பிரதேசங்களில் உள்ளடங்கப்படுவதால் இதன் காலநிலை வரட்சித் தன்மையுடையதாக உள்ளது.

2.4.1 வெப்பநிலை:

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவானது வரண்ட வலயப் பகுதியில் அடங்கியுள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை 32.5 பாகை செல்சியஸ் ஆகும்.

2.4.2 மழைவீழ்ச்சி:

இப்பிரதேசமானது வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றை அனுபவிக்கின்ற பிரதேசமாகும். இதனால் இங்கு செப்டொம்பர் மாதம் – ஓக்டோபர் வரையிலான காலப் பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.

வரடாந்த மொத்த மழை வீழ்ச்சியை எடுத்துக் கொண்டால் இது 1129.4 மில்லிமீற்றர் – 1972.8 மில்லிமீற்றர் வரை வேறுபடுகின்றது.

2.5 நிலப் பயன்பாடு:

திருகோணமலை மாவட்டத்தின் விவசாய நிலப்பயன்பாட்டினை நோக்கின் 14 சதவீதமாக உள்ளது.
2.6 குடித்தொகை:

மொத்த மக்கள் தொகையாக 972 பேர் உள்ளனர். மொத்தக் குடும்பமாக 282 காணப்படுகின்றது. இவர்களின் வாழ்வாதாரம் 99 வீதம் விவசாயமாகும்.

03. ஆய்வு நோக்கம்:

3.1 பிரதான நோக்கம்:

 • நிலாவெளி கிராம சேவகர் பிரிவில் தென்னையின் கீழ் நடப்படும் நீண்ட கால, குறுகிய காலப் பயிர்களை இனங்காணுதல்.

3.2 துணைநோக்கம்:

 • நிலாவெளி கிராம சேவகர் பிரிவில் தென்னை மரத்தின் கீழ் நடப்படும் நீண்ட கால, குறுகிய காலப் பயிர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை இனங்காணுதல்
 • நிலாவெளி கிராம சேவகர் பிரிவில் தென்னை மரத்தின் கீழ் நடப்படும் நீண்ட கால, குறுகிய காலப் பயிர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆலோசனைகளை முன்வைத்தல்

04.ஆய்வு முறையியல்:

ஆய்வு முறையியலானது தகவல் சேகரித்தல், தகவல் பகுப்பாய்வு என இருவகைப்படும்.

4.1 தகவல் சேகரிதல்:

தகவல் சேகரித்தல் ஆனது மூன்று வகைப்படும்.

4.1.1    முதலாம் நிலைத்தரவு.
4.1.1.1 எழுமாற்றாகத் தெரிதல்
4.1.2    இரண்டாம் நிலைத்தரவு.
4.1.3  மூன்றாம் நிலைத்தரவு.

4.1.1 முதலாந் நிலைத்தரவுகள்:

•    கள ஆய்வு அவதானம்
•    அப் பகுதி மக்களுடனான கலந்துரையாடல்
•    ஆய்வின் தலைப்புடன் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்
•    ஆழமான கலந்துரையாடல்
•    குழுக் கலந்துரையாடல்

4.1.1.1 எழுமாற்றாகத் தெரிதல்:

இவ்வாய்வுக்கு எழுமாற்று முறையிலான மாதிரி (Random sample) பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிலாவெளிக் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மூன்று கிராமங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அம் மூன்று கிரமங்களிலும் ஒவ்வொரு கிராமத்திலும் 10 பேரை எழுமாற்றாகத் தெரிவு செய்து, ஆழமான கலந்துரையாடல் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


4.1.2    இரண்டாந் நிலைத்தரவுகள்:

இரண்டாம் தரத்தரவுகள் (Secondary Data) என்பது ஆய்வாளன் தனது ஆய்வுக்கான தரவுகளை நேரடியாகச் சேகரிக்காது, முன்கூட்டியே பல்வேறு நோக்கங்களுக்காகச் சேகரிக்கப்பட்ட தரவுகளை எடுத்துக் கொள்ளுதல் ஆகும்.

 • தலைப்புடன் சம்மந்தப்பட்ட நூல்கள்
 • பிரதேச செயலக புள்ளி விபர நூல்கள்
 • வலைப்பதிதகள்
 •  செய்தித் தாள்கள்

4.2     தகவல் பகுப்பாய்வு முறை:

தகவல் பகுப்பாய்வை இரு முறைகளில் மேற்கொள்ளலாம். அவையாவன அளவுசார்முறை, பண்புசார்முறை என்பனவாகும். பெற்றுக் கொண்ட தரவுகளை அட்டவணைகள், வரைபடங்கள், படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

05.ஆய்வுப் பிரதேசத்தில் தென்னை மரத்தின் கீழ் பயிரிடப்படும் நீண்டகால, குறுகிய கால பயிர்கள்:

நிலாவெளி கிராமசேவகர் பிரிவில் தென்னை மரத்தின் கீழ் கத்தரி, மிளகாய், சோளம், கச்சான், வற்றாளைக் கிழங்கு, மரவெள்ளிக் கிழங்கு, புல், முருங்கை, கொய்யா, வெங்காயம், பப்பாசி போன்றன நீண்டகால, குறுகியகாலப் பயிர்கள் பயிரிடப்படுகின்றது.

5.1 சின்ன வெங்காயம் (Onion):

 • சின்னவெங்காயம் பயிரிடும் முறைகளும், அவை எதிர் கொள்ளும் பிரச்சினைகளும், அவற்றிற்கான தீர்வுகளும் இங்கு விளக்கப்படுகின்றது.
 • நிலாவெளிக் கிராம சேவகர் பிரிவில் சின்ன வெங்காயம் மிகவும் பிரதானமாக நடப்படுகின்றது.
 • பயிர் (Crop) நடுவதற்கு முதல் நிலத்தை உழவு செய்யது நிலத்தைப் பதப்படுத்துவர்.
 • பயிர்நடுவதற்கு 15 நாட்களுக்கு முதல் நிலத்தைப் பதப்படுத்துதல்.
 • வருடத்தில் இரண்டு தடவைகள் பயிரிடப்படுகின்றது (உதாரணமாக:- தை, வைகாசி)
 • காலையில் பயிர்களுக்கு நீர்பம்பி மூலம் நீர் பாய்ச்சப்படுகின்றது.
 • ஒரு ஏக்கருக்கான நாள் ஒன்றுக்கான தோட்ட வேலைக்கு ஆணுக்கு (பாத்தி கட்டுதல்) 800ரூபாயும், பெண்ணுக்கு 450 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
 • பயிர்களை நட்டு இரண்டு மாதத்தில் அறுவடை செய்யமுடியும்.
 • அறுவடை செய்த வெங்காயங்களை சிறிய குடிசைகளில் கட்டிக் காயவிட்டு, தனி வெங்காயமாக வெட்டி எடுக்க பெண்களை வேலைக்கு அமர்த்துவர். அவர்களுக்கான கூலி கிலோ ஒன்றிற்கு 4 ரூபாவாகும்.
 • சாதாரணமாக வெங்காயத்தின் விற்பனை விலை கிலோ ஒன்று 70 ருபாய் ஆகும். தற்போதைய விற்பனை விலை கிலோ ஒன்று 200 ருபாய் ஆகும்.
 • சில வேளைகளில் 150 ருபாய்க்கு வாங்கிய வெங்காயம் நடப்படும். பிடும்கும் போது  விற்கும் விலை 40 இருக்கும் சந்தர்ப்பத்தில் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும்.

5.1.1 வெங்காயத்துக்கு ஏற்படும் நோய்கள்:

 • பனிக்காலத்தில் பனிப் பூச்சி தொற்றும். கண்டு பிடிப்பது மிகக் கடினம். மணம் கூடிய மருந்துகளைப் பாவிக்கலாம். உதாரணமாக: சொலிசிறாம், கல்குலோண்
 •  மழைகாலத்தில் சுருட்டல் நோய் ஏற்படும். அதற்கான மருந்தாக டைட்டின் பவுடர், பொலியன் பயன்படுத்தப்படுகின்றது.

5.1.2 விற்பனை:

 • வியாபாரிகள் மொத்தமாக லொறியில் வந்து எடுத்துச் செல்வர். சந்தைப்படுத்தும் பொருட்டு கொழும்பு, தம்புள்ளைக்கு எடுத்து செல்லப்படுகின்றது.
 • தமது பொதிக்கு இலக்கம் இட்டு லொறியில் போடுவர். விற்று முடியத் பணம் கிடைக்கின்றது.

5.2 கத்தரி, மிளகாய்:

நிலாவெளி கத்தரி என்றால் திருகோணமலை மாவட்டத்திலேயே தனி மதிப்பு உண்டு. குறிப்பிட்ட சில காலமாக இங்கு பெய்து வரும் அடை மழையினால் கத்தரி, மிளகாய் என்பன கள ஆய்வுக்கு சென்ற (21.01.2011) போது பயிரிடப்படவில்லை.

5.3 மரவெள்ளி:

 • தண்ணீர் வசதி இருந்தால் வருடம் முழுவதும் நடுகின்றனர்.
 •  எட்டாம் மாதக் கடைசியில் பெரும்பாலும் மழையினை நம்பி நடுகின்றனர்.
 • நிலத்தை நன்றாகப் பதப்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கின்றது.

5.4 வாழை:

 • வருடம் முழுவதும் நடுகின்றனர்.
 • குருத்து அடைத்தல் நோய் வருகிறது.

5.5 பப்பாசி (Papaw):

 •     வருடம் முழுவதும் நடப்படுகின்றது.
 •    நோய்கள் பெரும்பாலும் தாக்குவது இல்லை.
 •    நிலத்தில் நீர் பிடிக்காமல் (ஊற்றுப் பிடித்தல்) பார்த்தால் நன்மை தரும்.
 •    8 அடிக்கு ஒன்று நடுதல் வேண்டும்.
 •    NGO’s பப்பாசி கன்றுகளை வழங்குகின்றது. APC யில் ஒரு கன்று 40 ருபாய்க்கு விற்கப்படுகின்றது.


5.6 கொய்யா (Guava):

 • வருடம் முழுவதும் நடுகின்றனர்.


5.7 சோளம், கச்சான், வற்றாளை:

 • பெரும்பாலும் மழையினை நம்பி நடுகின்றனர்.

5.8 புல்:

தனியே விற்பனைக்கு என்று இது நடப்படுவது இல்லை. வீட்டில் மிருகங்களை வளப்பவர்கள் அவற்றிற்கு உணவுக்காக வளர்க்கின்றனர்.

5.9 தென்னை:

தென்னை மரத்தில் இருந்தும் இப்பகுதி மக்கள் உச்சப் பயனைப் பெறுகின்றனர்.


06.    தென்னையின் கீழ் பயிரிடும் பயிர்கள் மத்தியில் பொதுவாக இனங்காணப்பட்ட பிரச்சினைகள்:

 • தென்னை மரத்தின் கீழ் நடப்படும் நீண்ட காலப் பயிர்களுக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படுவது குறைவு.
 • குறுகிய காலப் பயிர்களே பாரிய பிச்சினைகளை எதிர் நோக்குகின்றது. உதாரணமாக மரக்கறிகள், வெங்காயம், மிளகாய்
 • பரவலாக பயிர்களுக்கு கால ரீதியாக ஏற்படும் நோய்கள்.
 • விவசாயிகள் இடையே போதிய அறிவு இல்லை.
 • பயிர் செய்யும் காலத்தில் ஏற்படும் அதிகமான வெப்பம், மழை என்பன பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 • உரிய நேரத்தில் பசளைகள் கிடைப்பது இல்லை.
 • நியாயமான விலைகள் கிடைப்பது இல்லை.
 • சந்தைப்படுத்தல் வசதி குறைவு.
 • விலைத்தளம்பல்.

07.    தீர்வு ஆலோசனைகள்:

 • பயிர்களைத் தாக்கும் நோய்களை இனங்கண்டு அதற்கான மருந்துகளை மக்களுக்கு அறிவுத்தலின் பேரில் வழங்குதல்.
 • சரியான காலத்துக்கு ஏற்ற பயிர்களை மக்களுக்கு அறிவுறுத்துதல்.
 • விவசாயிகளுக்கான கடன் உதவிகளை ஊக்குவித்தல்.
 • முறையான சந்தை வாய்ப்பை வழங்குதல்
 • நியாயமான விலைகளைப் பெற்றுக் கொடுத்தல்.
 • விவசாயிகளுக்கான கருத்தரங்குகளை நடத்துதல்.
 • GIS (Geographic Information System) தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி நிலப்பயன்படு, மண் என்பவற்றின் தன்மைக்கு ஏற்ப விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

08.    ஆய்வின் நன்மையும், முக்கியத்துவமும்:

 • விவசாயக் காடாக்க வகைகளில் தென்னையின் கீழ் பயிரிடபப்படும் பயிர்களின் முக்கியத்துவம் பற்றி அறியக் கூடியதாக இருந்தது.
 • குறிப்பாக ஒரு கிராம சேவகர் பிரிவு என்பதால் அப்பகுதி பற்றி மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது.
 • தென்னையின் கீழ் பயிரிடப்படம் நீண்ட கால, குறுகிய கால பயிர்கள் எதிர் நோக்கும் பிச்சினைகளை இனங்காணக் கூடியதாக இருந்தது.
 • பிரச்சினைகளை இனங்கண்டதால் தீர்வு ஆலோசனைகளை முன்வைக்கக் கூடியதாக இருந்தது.

09.முடிவுரை:

நிலாவெளிக் கிராம சேவகர் பிரிவில் 99 வீதமான மக்கள் விவசாயத்தினை நம்பியே வாழ்கின்றனர். விவசாய நிலத்தினை பூரணமாகப் பயன்படுத்தும் முகமாக தென்னை மரத்தின் கீழ் நீண்டகால, குறுகிய  கால பயிர்களை பயிரிடுகின்றனர். விவசாய வன வளர்ப்பு முறைகளில் (Agro Forestry System) ஒன்றான தென்னை மரத்தின் கீழ் பயிர்கள் நடப்படும் முறை (Inter cropping under in coconut) நிலாவெளி கிராம சேவகர் பிரிவில் காணப்படுகின்றது.

இவ்வாறு தென்னை மரத்தின் கீழ் நீண்டகால, குறுகிய காலப் பயிர்களைப் பயிரிட்டு விவசாய நிலங்களைப் பூரணமாகப் பயன்படுத்தும் போதும்,  அப்பகுதி மக்கள் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இக் கள ஆய்வின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Presentationது.ரஜனி   

Line

hello

LineR

வீட்டுத் தோட்டம்

Line

விவசாயக் காடாக்கல் முறை

Line

a

jani Thurai

Field Research, Case Study,Tropical Agro Forestry System