சஞ்சிகையில் வெளிவந்த ஓவியங்கள்

April 5, 2012

இளம் பரிதி

2003

கிழக்குப் பல்கலைக் கழகம்

து.ரஜனி,
கிழக்குப் பல்கலைக் கழகம்.

இளம்பரிதி – 2007,

இதழ் – 03

கிழக்குப் பல்கலைக் கழகம்

து.ரஜனி,
கிழக்குப் பல்கலைக் கழகம்.

Advertisements

.: உலக மக்கள் தொகை நாள்

July 18, 2009

உலக மக்கள் தொகை நாள் 11.07.2009 (The World Population Day)

இன்று உலகிலே சனத்தொகை வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, நிலப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சூழல் பிரச்சினைகள் என்பவற்றுடன், இன்று அதிகமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை என உலகநாடுகள் எதிர்கொள்ளும் பல தொடரான பிரச்சினைகளுக்கு குடித்தொகைப் பெருக்கமும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை நாம் ஏற்றாக வேண்டும். உலக குடித்தொகைப் போக்கானது, அந்நாடுகளின் பௌதிகத் தன்மை, அரச கொள்கைகள், கல்வியறிவு, சமூகக் காரணிகள், பொருளாதாரக் காரணிகள் என்பனவற்றைப் பொறுத்து வேறுபட்டுச் செல்கின்றது.

2009.07.18(Population-_day)001

1987 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆந் திகதி உலக சனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பின்போது 5 பில்லியன் மக்கள் தொகையினை எட்டியிருந்தது. எனவே உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற குடித்தொகைப் பெருக்கம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏழுந்ததுடன் குடித்தொகையின் மாற்றம் மற்றும் போக்கு, அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதை உலக நாடுகள் பலவற்றால்  உணரப்பட்டிருந்தது. எனவே தான் ஐக்கிய நாடுகள் சபையினால் ஜுலை 11 ஆந் திகதியை ‘உலக மக்கள் தொகை நாள்’ தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதிகரித்துவரும் குடித்தொகை வளர்ச்சி

உலக குடித்தொகை வளர்ச்சியானது கி.பி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840 ஆம் ஆண்டில் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 ஆம் ஆண்டில் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960 ஆம் ஆண்டில் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில்  600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதீப்பீட்டுப் பணியகத்தின்  அறிக்கை தெரிவித்திருக்கின்றன.

2009.07.18(Population-_day)002

தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது, குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு (World Population Clock) கணிப்பீன் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்திருத்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. இவ்வளர்ச்சியின் பெறுபேறாக அண்மைய தரவின் படி உலகில் 6,792,707,775 மக்கள் தொகையாக உயர்ந்துள்ளதை குடித்தொகைக் கடிகாரம் காட்டுகின்றது. எனினும் 2050 ஆம் ஆண்டில் குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது  900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து  கொண்டு செல்லுமாயின் 2075 ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும், 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009.07.18(Population-_day)003

ஆபிரிக்கக் கண்ட நாடுகள் சிலவற்றில் தற்போதைய குடித்தொகை வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும், ஐரோப்பாவில் 12 வீதத்திலிருந்து  7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. எனினும் இன்று வைத்தியத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித வளர்ச்சியினால் வருடத்திற்கு 2.4 வீதத்தினால்  முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இந்நிலை தொடருமாயின் 2050 ஆண்டில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை 10 வீதத்திலிருந்து 38 வீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் உலக மக்கள் தொகையில் சரி அரைவாசிக்கு உட்பட்டோர் 25 வயதினராவர். அத்துடன் அபிவிருத்தியடைந்துவரும் 57 நாடுகளில் 15 வயதிற்கும் உட்பட்டவர்கள் சராசரியாக 40 வீதத்திற்கு மேல் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையினால் எதிர்காலத்தில் குடித்தொகைப் பெருக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2009.07.18(Population-_day)004

அதிக குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா,  நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்களாதேஷ் போன்ற நாடுகள் இனங் காணப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் (ESCAP), உலகில் குடித்தொகை கூடிய நாடாகக் காணப்படும் சீனா 1,306,313,812 குடித்தொகையினை கொண்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 1/5 பகுதியாகும். இங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு 136 பேர் என்ற கணக்கில் மக்கள் வசிக்கின்றனர்.

2009.07.18(Population-_day)005

இரண்டாவது குடித்தொகை கொண்ட நாடாக இந்தியா காணப்படுகின்றது. உலக குடித்தொகையில் ஆறு பேரில் ஓருவர் இந்தியர் என்ற விகிதத்தில் காணப்படுகின்றனர். உலகின் மொத்த நிலப்பரப்பில் 24 வீதத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், உலக மொத்தக் குடித்தொகையில் 16.7 வீதமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். எனினும் குடித்தொகை கூடிய நாடாக சீனா உள்ள போதிலும், மக்கள் செறிவாக வசிக்கும் நாடாக இந்தியாவும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் காணப்படுகிறது என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு கூறியுள்ளது. அத்துடன் குடித்தொகை அடர்த்திகூடிய நகரமாக, ஜப்பானின் டோக்கியோ நகரம் விளங்குகின்றது. இங்கு 12 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஜப்பானின் மொத்தக் குடித்தொகையில் 10 வீதமாகும்.

வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் தெற்காசிய நாடுகளின் கருவளப்போக்கு சற்று வித்தியாசமானது. இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1ஆகவும், பிறப்புவீதம் 1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்புவீதம்  1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காணப்படுகின்றது.

2009.07.18(Population-_day)006

இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத்தின் பிரகாரம் 18,797,257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை தற்பொழுது 2009 ஆண்டு மதிப்பீன் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென  எதிர்பார்க்கப்படுகின்றது.

2009.07.18(Population-_day)007

இலங்கையின் கருவளவீதமானது 1965 ஆம் ஆண்டில் 5.19 வீதமாகவும், 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000 ஆண்டுவரையிலான காலப்பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு  குறைவடையும் கருவளப் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடுபாடு, திருமணவயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.

குடிப்பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்

மனிதவளம் ஒரு முக்கியமான வளமாகக் கருதப்படுகின்ற போதிலும், ஒரு சிறு பகுதியினரே ‘மனித வளம’ என்ற வரையறைக்குள் அடங்குவர். எனினும் அதுவே இன்று மிகையாகி விட்டதால் உலகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதகுருவான ரி.ஆர் மால்தஸ், தனது “மால்தஸ்சின் மக்கள் தொகைக் கோட்பாட்டில்” அதிகரிக்கின்ற குடிப்பெருக்கத்தினால் மக்கள் உணவின்றி அவதிப்படுவர் என்றார். அன்று அவரால் வெளியிடப்பட்ட கருத்து, உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள இன்றைய சூழ்நிலையில் உலகநாடுகள் பலவற்றால் நினைவு கூரப்படுகின்றது.

2009.07.18(Population-_day)008

குடித்தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், கருநகரங்கள் உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்று ஒட்டு மொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதாரப் நெருக்கடியினையும் கூறலாம்  என ஐ.நா சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இயக்குனர் தொராயா அஹமத் ஒபய்த் தெரிவித்துள்ளார்.

உலகில் எத்தனை பேர் வாழ முடியும் என இது வரைக் கணக்கிடப்படவில்லை என வொஷிங்டனில் செயற்பட்டு வரும் பூரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லிம் பஃரே தெரிவித்தார். பூமியில் காணப்படும் வளங்களை பொறுத்துத் தான் பூமியில் வாழக் கூடியவர்களின் குடித்தொகை அமையுமென கருத்து வெளியிட்டிருக்கின்றார். எனினும் உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் 20 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வளங்களை 2 இலட்சம் பேருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

அண்மைய புள்ளி விபரத்தின் படி 100 கோடி மக்கள் குடிசைகளில் வாழ்வதுடன், 110 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் வசதியின்றியும், 260 கோடி மக்கள் சுகாதர வசதியின்றிக் காணப்படுவதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது இவ்வாறிருக்க பு8 நாடுகளின் மாநாட்டில் “உலக வறுமையும் பற்றாக்குறையும்”  என்ற அமர்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெசின், “உலகில் 6 பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாகவும், 6 வினாடிக்கு ஒரு குழந்தை போதிய போசாக்கின்மையால் இறக்கின்றது’ எனவும், ஆபிரிக் நாடுகளே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றது எனத் தகவல் வெளியிட்டுள்ளார்.

2009.07.18(Population-_day)010

உலக விவசாய மற்றும் விவசாய அமைப்பான ‘FAO’   இன் கருத்துப்படி உலக சனத்தொகையில் 14 வீதமானவர்கள் உடலுக்குத் தேவையான கலோரி உணவுகள் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இதில் இந்தியா, சீனா, கொங்கோ,  பங்களாதேஷ், இந்தோனேசியா, நைஜீரியா போன்ற நாடுகள் அதிகம் பாதிப்படைவதாக உலக விவசாய நிறுவனத்தின் சுட்டெண் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 70 – 90 வீதமான குடிநீர் விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. தற்பொழுதுள்ள குடித்தொகையானது  2050 ஆம் ஆண்டில் 900 கோடியாக உயரும் போது, நீர்த் தேவையும் இரண்டு மடங்காக அதிகரிக்குமென எதிர்வு கூறப்படுகின்றது.

2009.07.18(Population-_day)011

அதிகரித்துவரும் சனத்தொகைப் பெருக்கத்தின் காரணமாக 2000 – 2005 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 36 மில்லியன் ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த 25 ஆண்டு காலப்பகுதிகளில் 20 வீதமான  சதுப்புநிலங்களும், 12 வீதமான  பறவையினங்களும்  அழிவடைந்திருப்பதுடன், 3 வீதமான தாவர இனங்கள் அழிவடையும் அபாய நிலையை அடைந்திருக்கின்றது.

குடிப்பெருக்கம், செறிவைத் தவிர்த்தல்

பாமரமக்கள் மத்தியில் குடும்பநலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்,  சிறப்பான பலனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும்  பாடசாலைகளில் குடித்தொகைக் கல்விக்கு முக்கியமளிப்பதுடன், குடித்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் சமூகப் பொருளாதார தாக்கங்கள் பற்றிய செயலமர்வுகள் மேற்கொள்வது அவசியமாகின்றது.

2009.07.18(Population-_day)012

குடித்தொகைச் செறிவினை தவிர்ப்பதற்காக நகரப்புற விரிவாக்கம், நகர வசதிகளை கிராமங்களுக்கும் விஸ்தரித்தல், கட்டுப்பாடற்ற குடியிருப்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல், மக்கள் இடப்பெயர்வைத் தவிர்க்க சமச்சீரான தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், போன்றன மக்கள் ஒர் இடத்தில் செறிவாக குடியேறுவதனைத் தவிர்க்கலாம்.

இன்று உலகம் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு குடித்தொகைப் பெருக்கமே மூல காரணமாகும். இதனை பல நாடுகள் அனுபவித்து வருகின்றன. இதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளைத் தவிர்க்க, முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.

து.ரஜனி               Rajani Thurai

உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு பத்திரிகையில் வெளிவந்த ஆக்கம் (11.07.2009)

தினகரன் – e – paper

கிழக்கொளி சஞ்சிகை வெளியீட்டில் “உலக மக்கள் தொகை நாள்”

World Clock – Web

http://www.peterrussell.com/Odds/WorldClock.php

National Geographic You tube Video

The Effects of Overpopulation