.: காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள்

July 18, 2009

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் பற்றிய ஒரு நோக்கு (தொடர் கட்டுரை – தினக்குரல் 23.06.2009 முதல் 29.06.2009 வரை)

பாகம் – 01  (தினக்குரல் – 23.06.2009  )

காலநிலை மாற்றம் Effects of Climate  Changes

உலகின் காலநிலையில் பாரிய மாற்றங்கள் காலம் காலமாக இடம்பெற்று வந்திருக்கின்றன என்பதை உயிர்ச் சுவடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள்  கண்டறிந்துள்ளனர். காலநிலை மாற்றங்களினால் புவியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை  புவியமைப்பியல்,  தாவரவியல், விலங்கியல், மானிடவியல் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டறிந்த சான்றுகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக புவிச்சரிதவியல் காலத்தில் பனியுகம் அல்லது பனிக்காலம் காணப்பட்டு இருந்தன என்பதை நிருபிக்க, மிகப் பழையபாறைகள் சான்றுகளாக உள்ளன. இதனை விட தாவர விலங்குகளின் பரவல், ஏரி – கடல்களின் மட்ட மாற்றங்கள் போன்றவையே போதிய சான்றுகளாக விளங்குகின்றன.

2009.07.18(Climate_change)001

மிகப் பழமையானவை என அறியப்பட்ட பாறைகள் ஏறக்குறைய 1600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை எனச் சில ஆய்வு முறைகளின் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் கேம்பிரியன் காலத்தில் இருந்து 500 மில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை பற்றிய அறிவு தெளிவாக்கப்பட்டது. பாறைகளின் சான்றுகளை நோக்கும் போது அவற்றின் அறைபாறைக்களிமண், பனிக்குரிய படிவுகள், காலநிலையையும் அதன் மாற்றங்களை எடுத்துக்காட்டக் கூடியவை. உப்புத்தன்மை வாய்ந்த படிவுகள் வரட்சியைச் சுட்டிக் காட்டுகின்றன. நிலக்கரிப் படிவுகள் செழிப்பான காடுகள் இருந்தன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதே போன்று மரத்திலுள்ள  மரவளையங்கள் காலநிலை மாறுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளப் பெருக்குகள், வரட்சி என்பன அடுத்து அடுத்து வரும் மாற்றங்களாகக் காணப்படுவதனால், அவற்றுக்குரிய படிவுகளும் மாறி மாறியே உருவாகின்றன.

2009.07.18(Climate_change)002

காலநிலை மாற்றம் குறித்து, வரவாற்றுக் காலநிலைக்கான சான்றுகளை நோக்குமிடத்து, முதல் நூற்றாண்டில் இருந்து 16ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலநிலைத் தகவல்கள் வளிமண்டலப் பதிவேடுகளிலும், தொலமி போன்ற பலரின் குறிப்புக்களிலும் காணப்படுகின்றன. வெள்ளம், வரட்சி பற்றிய குறிப்புக்கள் பண்டைக்கால அறுவடை பற்றிய குறிப்புக்களும் இலக்கியத்திலும் காணப்படுகின்றது. வானிலை பற்றிய குறிப்புக்கள், காலநிலைக் கட்டுப்பாடுகள், தாவரங்களின் பரவல், காடுகளின் பரவல், குடியிருப்புக்கள் பற்றிய சான்றுகள், பனிப்படலத்தின் நகர்ச்சிகள், மக்கள் பெயர்வுகள் போன்றன பலவகையான சான்றுகளாகக் காணப்படுகின்றன. புவிஅமைப்பியலின் வரலாற்றினையும் கால ஓட்டத்தில் ஏற்பட்ட உயிர் வாழ்க்கையையும் அடையற்பாறைகள் பதிவு செய்துள்ளன. மிகப் பழைய படிவுப் பாறைகள் பனி மூடலுக்கு உட்பட்டு இருந்ததையும், மலைப்பனிக்கட்டி ஆற்றுத் தாக்கங்களிலும் பார்க்கக் கண்டப்பனிக்கட்டியாற்றுத் தாக்கங்கள் காலநிலை மாற்றத்தினைத் தெளிவாகக் காட்டக் கூடியன. பழங்காலத்தில் உலகின் பெரும் பகுதியை பனிவிரிப்பு போர்த்தி இருந்தது என்பதனை அவை சுட்டிக்காட்டுகின்றன.

2009.07.18(Climate_change)003

கேம்பிரியன் காலத்தின் போது காலநிலைக்கான சான்றுகள் அக்காலத்துக்குரிய காலநிலைப் போக்குகளை எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக சைலூரியன் காலத்தில் வெப்பமானதும், சில வேளைகளில் சமச்சீரானதுமான காலநிலைகள் காணப்பட்டு இருந்தது. இக்காலத்தின் உலகம் எங்கும் பவளப்பாறைகள் தோற்றம் பெற்றன. இக்கால இறுதியில் மலைகள் உருவாக்கப்பட்டன. கார்போபரஸ் காலத்தில் காலநிலை வெப்பமாகவும் காணப்பட்டது. இக்காலத்தின் இறுதியில் மலையாக்கங்களின் காரணமாக நிலம் உயர்வடைந்தது. கிருட்டாசியஸ் காலத்தில் புவியோட்டு அசைவுகளும், பெரும் எரிமலை வெடிப்புக்களும் ஏற்பட்டன. ரேசறியுகக் காலநிலையானது மிதமானதாகவும் காணப்பட்டது. உயிரினங்கள் தோன்றிய காலமாக முன்கேம்பிரியன் காலம் 2000 மில்லியன் வருடங்களாகக்  காணப்படுகின்றது. இக்காலத்தில் தான் பூமியில் உயிரினங்கள் தோன்றியது. இவ்வேளையில் தான் பல உயிர்களின் மத்தியில் ஹோமோசேஸ்பியர் எனப்படும் மனித இனம் தோன்றியது.

2009.07.18(Climate_change)004

மேற்கூறப்பட்ட யுகங்களில் காலநிலை மாறுதல்கள் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் இனங்கானப்பட்டுள்ளன. அதில் முதலாவது நோக்கத்தக்கது, சூரியப் புள்ளிகள் (Sun Spots)

ஆகும். சூரியனின் மேற்பகுதியில் காலத்துக்குக் காலம் ஏற்படும் அசாதாரணமான வெப்ப வெளியேற்றங்கள் சூரியப்புள்ளிகள் என அழைக்கப்படுகின்றன. இப் புள்ளிகள்  11 – 22 வருட வட்டங்களைக் கொண்டு காணப்படுகின்றன. சூரிப்புள்ளிகள் பெரியளவாகவும் அதிகளவும்; தோன்றும் காலங்களில் சூரியனின் கதிர் வீசல் ஆற்றல் அதிகமாகக் காணப்படும். வடகோளத்தில் ஏறக்குறைய 1500 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் மழைவீழ்ச்சிக்கும் சூரியப் புள்ளிகளுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றது, இக்காலங்களில் புயல்களும், பாரிய மழைவீழ்ச்சிகளும் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. சூரியப் புள்ளிகள் அதிகமான காலங்களில் காற்றின் எழிற்சியும் அதன் காரணமாக புவியின் பரப்பில் இருந்து வளிமண்டல உயர் மட்டங்களுக்கு  வெப்பம் பெருமளவு கடத்தியும் செல்லப்படுகின்றது.

2009.07.18(Climate_change)005

இரண்டாவது காரணியாக ஞாயிற்றுமாறிலி காணப்படுகின்றது. புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் செங்கோணத்தில் இடம்பெறும் சூரியக்கதிர் வீசலின் அளவு எப்போதும் மாறிலியாகவே இருக்கும். அது நிம்பஸ் 6 செய்மதியின் கணிப்பிட்டு அளவின் படி ஞாயிற்று மாறிலி  1392W ஆகும். தற்போது அது 1.6%   உயர்வினையும் காட்டியுள்ளது. சூரியனைச் சுற்றிவரும் வட்டப்பாதை நீண்டகாலமாக ஏற்பட்டு வரும்  படிப்படியான மாற்றங்களினால் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.

2009.07.18(Climate_change)006

அடுத்த காரணியாக மையக்கவர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் காணப்படுகின்றது. சூரியனைச் சுற்றிவரும் புவியின் சுற்றுவட்டப்பாதையின் மையக்கவர்ச்சியின் காரணமாக சூரியனில் இருந்து புவியின் தூரத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றது. எனவே நீண்ட காலமாக இத்தகைய மாற்றங்கள் மாறிமாறி ஏற்பட்டு வரும் போது காலநிலையில் அவை மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலே குறிப்பிட்ட காரணங்களினால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினை சிறிது காலத்தினுள் உணர்ந்து விடக்ககூடிய ஒன்றல்ல. அவை பல கால இடைவெளியில் அனுபவிக்கப்பட்ட ஒன்றாகும். பல யுகங்களின் மத்தியில் உணரப்பட்ட இந்த மாற்றங்கள் தற்காலத்தில் மிகவும் குறுகிய காலத்தினுள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.

அண்மையில் பூகோள வெப்பமடைதலுடன் தொடர்பாக இச் சூரியப் புள்ளிகள் தொடர்புபடுத்தப்படுகின்றது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து காலத்துக்குக் காலம் வெளியேறும் அசாதாரண வெப்பம் வான வெளியின் ஊடாகப் பரவி பூமியை வந்தடைகின்றன. அண்மைக்காலத்தில் குறுகிய காலகட்டத்தினுள் பல காலநிலை மாறுதல்களை அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது. காலநிலை மாற்றத்துக்கான காரணங்களுள் சூரியக்கதிர் வீச்சில் ஏற்படும் நீண்ட கால மாற்றங்களும் ஒன்றாகும். கதிர் வீச்சில் ஏற்படும் இம் மாற்றங்கள் சூரிய வெப்பம் படிப்படியாச் சிதறுவதினாலும் நிகழ்கின்றன என்றும் கருதப்படுகின்றது.  சூரியனின் குறைவான கதிர் வீச்சுக் காரணமாகவே பனியுகங்களும், கூடிய கதிர் வீச்சினால் வெப்ப யுகங்களும் ஏற்பட்டன.

சூடேறும் பூகோளம்.

கடந்த சில தசாப்தங்களாக வானிலை, காலநிலையில் சில மாறுதல்கள் அவதானிக்கபட்ட போதும், தற்போது அதுவே பூமியில் இடம்பெறும் சமநிலையில்லாத காலநிலைக்குப் பிரதான காரணி ஆகும். வளிமண்டலச் சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான் இவ் விளைவு ஏற்படுகின்றது. இதற்கு அடிப்படை பூமியில் அதிகரித்துள்ள பச்சைவீட்டு வாயுக்கள் தான் என விஞ்ஞானிகள் காரணம் காட்டியுள்ளனர். இவ்வாயுக்களாக CO2 (காபனீர்ஒட்சைட்டு) , CH4 (மெதேன்), CFC (குளோரோபுளோராகாபன்) ,SO2 (கந்தகவீர்ஒட்சைட்டு), CO (காபனோர்ஒட்சைட்டு), N2O (நைதரசன்ஒட்சைட்டு) என்பனவற்றை இனங்காட்டியுள்ளனர். இவ் வாயுக்கள் வெப்பத்தை உறிஞ்சி வைக்கும் ஆற்றல் வாய்ந்தவை. இதன் விளைவே பூகோள வெப்பமாதலாகும்.(Global Worming)

2009.07.18(Climate_change)007

சூழல் என்ற பதம் சில தசாப்தங்களாகத் தான் பொது மக்களிடையே பிரபல்யம் அடைந்துள்ளது. பூமியிலுள்ள உயிர்த்தொகுதிகள், பதார்த்தங்கள், செயன்முறைகள், சக்தி ஆகியவற்றிடையே நடைபெறும் இடைவிடாத் தாக்கங்களின் முக்கியத்துவம் விஞ்ஞானிகளால் அண்மைக்காலத்தில் தான் உணரப்பட்டுள்ளது. இவற்றுக்கிடையே உள்ள தொடர்புகளின் சிக்கல் தன்மையையும் அவற்றின் இயற்கை முறைகளில் தலையிடுவதால் ஏற்படக் கூடிய கேடுகளையும் இப்போது தான் உணர ஆரம்பித்துள்ளோம். இன்றைய பிரதான பிரச்சினை  சுற்றுச்சூழல் மாசடைதலாகும். மக்கட் தொகைப் பெருக்கம், விரைந்த நகராக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, இலாப நோக்குடைய முதலாளித்துவ சமூகம், சூழல் பற்றிய கல்வியறிவு குறைவு முதலான பலவும் ஒருங்கிணைந்து சூழலை மாசடைய வைத்துள்ளன. வளி, நீர், நிலம் ஆகியவற்றின் பௌதிக இரசாயன உயிரியற் பண்புகளின் விரும்பத்தகாத மாற்றமே சூழல் மாசடைதலாகும். இந்த மாற்றத்தின் விளைவே புவி வெப்பமடைதலாகும் வளிமண்டலத்தில் பசுமையில்லாத வாயுக்கள் அதிகரிப்பது, காடுகள் அழிக்கப்படுவது போன்ற நிலப்பகுதியின் இயல்பில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான் வளிச்சூழலின் சமநிலை பாதிக்கப்படுகின்றது.

2009.07.18(Climate_change)008

தொழிற்புரட்சிக் காலம் வரை இயற்கையானது இயல்பாகவே  இயங்கிக் கொண்டு இருந்தது. அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட எல்லை மீறல்களை புவி சகித்துக் கொண்டு வந்தது. ஆனால் 1750 களிற்குப் பின் நிலமை தலைகீழாக மாறத் தொடங்கியது. 18 ஆம் நூற்றாண்டின் பின்பு தொடங்கிய தொழிற் புரட்சி உருவாக்கிய விளைவுகளின் தாக்கம் இன்று வரை மேலிட்டுக் கொண்டே செல்கின்றது. காலநிலையானது சூழல் விவகாரத்திற்கு அப்பாற்பட்ட விடயமாக உருவெடுத்து இருப்பதாக பசுமைப் புரட்சிக்கான ஆலோசகர் டானியல் மில்லர் கூறியுள்ளார்.

பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றம் அதிகரிக்கின்ற போது பூமி வெப்பமேறலுக்கு உட்படுகின்றது. இந்த வாயுக்கள் பூமியில் இல்லாது விட்டால் அது குளிர்வடைந்து விடும். இந்த வாயுக்கள் இன்று அதிகரித்துள்ளதினால் உலகம் பாரிய தாக்கங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. 1970 இல் இருந்து பூமியின் வெப்பம் சராசரியாக 4 செல்சியஸ் உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றம் மாபெரும் சுற்றுச் சூழல் பிரச்சனையாகும். இது மனித குலத்திற்கு மிகப் பெரிய சவால் தான். இது தற்போது மட்டும் நிலவி மறைந்து விடப் போகின்ற பிரச்சினையல்ல. போசனையற்று இயற்கையை அழிப்பதன் விளைவாக வாழ்வாதார அமைப்புக்கள் முழுமையாகச் சிதைவதற்கான அறிகுறியாக இது காணப்படுகின்றது. மனித செயற்பாடுகளினால் ஏற்பட்ட காலநிலை மாறுதல்களுக்கு பூமியின் பதில் நடவடிக்கையாக, அது நம் மீது தொடுக்கும் போர் என்றே சொல்லாம். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய தொழிற்புரட்சி உருவாக்கிய விளைவுகளின் தாக்கம் இன்று வரை மேலிட்டுக் கொண்டே செல்கின்றது.

பூகோள வெப்பமதலுக்கான காரணங்கள்.

பூகோள வெப்பமாதலுக்கு இரண்டு பிரதான காரணங்கள் பேசப்படுகின்றது. அதாவது,

1)பச்சைவீட்டு வாயுக்கள் அதிகரிப்பு.
2)ஓசோன் படையில் ஏற்படுகின்ற துவாரங்கள்.

1. பச்சைவீட்டு வாயுக்கள் அதிகரிப்பு.

பூகோளச் சூழல் நடவடிக்கைகளில் பச்சைவீட்டுத்தாக்கமும் ஒன்றாகும். பச்சைவீட்டுத் தாக்கமானது பூமி அதிகளவில் வெப்பமடைவதால் நிகழ்கின்றது. இத் தாக்கம் பச்சைவீட்டு விளைவு (Green House Effect) என அழைக்கப்படும். சுருக்கமாகச் சொல்வது என்றால் புவிச் சூழலின் புற வெப்பம் அதிகரிப்பதையே குறிக்கும். இத் தாக்கம் பற்றி முதன் முதல் 1827 இல் Baron Jean Bastiste Faurerin என்பவரால் விபரிக்கப்பட்டது. இத்தாக்கமானது பூமியை வெப்பமாக்கும் பச்சைவீட்டு வாயுக்களின் பொறிமுறைச் செயற்பாடாகக் காணப்படுகின்றது.

2009.07.18(Climate_change)010

சூரியனில் இருந்து பெறப்படும் கதிர் வீச்சு வளிமண்டலத்தினை ஊடறுத்து புவி மேற்பரப்பை அடைகின்றது. இவ்வாறு ஊடறுத்து புவி மேற்பரப்பை அடையும் குற்றலைக் கதிர் வீசலானது, உறிஞ்சல், தெறித்தல், சிதறல் போன்ற செயல்முறைகளுக்கு உட்பட்டு சமூத்திரம், நிலம், தாவரப்போர்வை என்பனவற்றை வெப்பமாக்குகின்றது. பின்னர் அது நெட்டலைக் கதிர்வீச்சாக பூமியை விட்டு வெளியேறுகின்றது. இது ஒரு சமநிலையில் நிகழ்வதிகால் இதனை ஞாயிற்றுச் சமநிலை  என்பர். ஆனால் இன்று, ஞாயிற்றிலிருந்து உள்வரும் வெளிச்செல்லும் சக்தியானது வளிமண்டலத்திலுள்ள பச்சைவீட்டு வாயுக்களினால் உறிஞ்சப்படுகின்றது. இதனால் புவி வெப்பமடைகின்றது.

இயற்கையாகவும் செயற்கையாகவும் தோற்றுவிக்கப்படும் பச்சைவீட்டு வாயுக்கள் புவியில் பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. வளிமண்டலத்தில் கடந்த 200 வருடங்களாக பச்சைவீட்டு வாயுக்களின் சேர்க்கையானது மனித நடவடிக்கைகளால் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 1980 களில் IPCC கணிப்பீட்டின் படி பச்சைவீட்டு வாயுக்களின் வீதமானது பின்வருமாறு மதிப்பிடப்பட்டுள்ளது. காபனீர்ஒட்சைட்-55 %, குளோரோபுளோரோகாபன் – 24% , மெதேன் – 15% , நைதரசன் ஒட்சைட் –  6% (Hall & Hanson) இருந்தது. கைத்தொழில் மயமாக முன்பு  1992 இன் காபனீர்ஒட்சைட் இன் சேர்க்கையானது 288 288 ppmv (Parts per Million Volum) ஆக இருந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டில் 370 ppmv என மதிப்பிடப்பட்டது. இந்த மாற்றமானது பூகோளம் சூடாகவே வழிவகுத்துள்ளது.

பாகம் – 02  (தினக்குரல் – 24.06.2009  )

2. ஓசோன் படையில் ஏற்படுகின்ற துவாரங்கள்.

சூரியனின் கதிர்களில் உயிர்ச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச்சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையாத வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச்சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய கதிர்களை தேவையான அளவு புவிக்கு வழங்குகின்ற ஒரு படலமே ஓசோன்படை ஆகும். இவ் ஓசோன்படை இல் ஏற்பட்டுள்ள துவாரங்களே இன்று மனிதன் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.இவ் ஓசோன்படையானது மாறன்மண்டலத்துக்கும், படைமண்டலத்துக்கும் இடையே 12 Km – 45 Km வரையான பிரதேசத்தினுள் பரந்துள்ள மென்படை எனலாம். இவ் ஓசோன்படை அமைந்துள்ள மாறன் மண்டலமே புவியின் வானிலை, காலநிலை நிலைமைகளுக்கு முக்கியமானதாகும்.

அறிவியலின் அசுத்தமான வளர்ச்சி வளிக்குச் சொந்தமில்லாத பல புதிய இரசாயனங்களை வளிமண்டலத்தினுள் திணித்துக் கொண்டு இருக்கின்றது. இதன் முக்கிய பங்கு (Chloro Fluro Carbons) க்கு உண்டு. அதனை விட தொழில் பேட்டைகளில் இருந்து வெளியாகும் CH4, CH3, NO3 யையும் தவிர, இயற்கையாகவே எரிமலை வெடிப்பு, சதுப்பு நிலங்கள், பருவகாலமாற்றங்கள், சூரியவட்டம், காற்றின் வேகம் போன்றவற்றில் கூட இவ் வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றது.

இவ் ஓசோன்படை குறித்து அறிவு பூர்வமான பார்வை 1970 களில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் அந்தாட்டிக்காப் பகுதியில் கண்டறியப்பட்டாலும் கூட 1980 களில் அந்தாட்டிக்கா கலிபே எனும் பகுதியில் ஓசோன் படையில் பெருமளவு துவாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு உறைபனி காலத்தில் துவாரங்கள் தோன்றுவதாகவும் NIMBUS 7 எனும் செயற்கைக் கோளினால் கண்டறியப்பட்டது. இவ் ஓசோன்படையின் அழிவு ஜுன் மாதம் முதல் குறைந்து, ஒக்டோபரில் மிகக் குறைந்து பின் நவம்பரில் திடீரென அதிகரித்துள்ளது. இச்செயற்பாட்டிற்கு இயற்கை நிகழ்வுகளும், காற்றின் விளைவு, தட்பவெப்ப மாற்றங்கள் போன்றவையும் காரணம் எனத் தோன்றுகின்றது. இவ்வாறு 80 களில் ஏற்பட்ட துவாரம் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

2009.07.18(Climate_change)011

ஓசோன்படையை  அழிக்கும் வாயுக்களான CFC, N2O போன்ற வாயுக்களினைப் படைமண்டலத்தில் பேணப்பட்டு வந்த ஓசோன்படையின் இருப்பினை இல்லாதொழித்து வருகின்ற செயன் முறையே ஓசோன்படைச் சிதைவு என்கின்றோம். அதாவது படைமண்டலத்தில் ஓசோன்படையின் உற்பத்தியை விட அழிவு விரைவாக அதிகரித்து, இயற்கைச் சமநிலையானது சிதைபட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஈடுகொடுக்க முடியாத ஓசோன்படையின் இழப்பையே ஓசோன்படையின் துவாரம் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். தற்போது இதன் பருமன் 2.8 கோடி சதுர KM என மதிப்பிடப்பட்டுள்ளது.

2009.07.18(Climate_change)012

காலநிலை மாற்றங்களால் பூகோளத்தில் ஏற்றட்டுள்ள பேரிடர்கள்.

காலநிலை மாற்றங்கள் காரணமாக உயிர் கோளத்தின் மீதான தாக்கங்கள் கூடிக் கொண்டே செல்கின்றது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மை காரணமாக உயிர்க் கோளமானது நிலைதடுமாறிக் கொண்டு இருக்கின்றது. இதனால் பல விளைவுகளுக்கு பூமி முகம் கொடுப்பது மட்டுமல்லாது முகம் கொடுக்க வேண்டியும் உள்ளது. அந்த வகையில் முதலாவது பிரச்சினையாகக் கொள்ள வேண்டியது வெப்பச் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.

வெப்பநிலைத் தரவுகளை நோக்குமிடத்து பூமியின் வெப்ப நிலையானது படிப்படியாக அதிகரிப்பது தெளிவாகின்றது. 2100 ஆண்டளவில் புவியின் வெப்பநிலை 2 – 5 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்குமென எதிர்வு கூறப்பட்டு;ள்ளது. இக் காலத்தில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் சமுத்திரத்தின் வெப்பநிலை அதிகரித்து நீர் ஆவியாகின்றது. அதனால் அவ்விடத்தில் தாழமுக்கம் ஏற்படுகின்றது. ஆகவே தாழமுக்கத்தை நிரப்ப உயரமுக்கப் பகுதியில் இருந்து தாழமுக்கத்தை நோக்கி காற்றுக்கள் வீசுகின்றது. இச் செயற்பாடு தற்பொழுது அடிக்கடி நிகழும் ஒன்றாகி விட்டது. இதற்குக் காரணம் வெப்பநிலை அதிகரிப்பது தான்.

2009.07.18(Climate_change)013

வெப்பநிலைத் தரவுகளை நோக்குமிடத்து பூமியின் வெப்ப நிலையானது படிப்படியாக அதிகரிப்பது தெளிவாகின்றது. 2100 ஆண்டளவில் புவியின் வெப்பநிலை 2 – 5 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இக் காலத்தில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் சமுத்திரத்தின் வெப்பநிலை அதிகரித்து நீர் ஆவியாகின்றது. அதனால் அவ்விடத்தில் தாழமுக்கம் ஏற்படுகின்றது. ஆகவே தாழமுக்கத்தை நிரப்ப உயரமுக்கப் பகுதியில் இருந்து தாழமுக்கத்தை நோக்கி காற்றுக்கள் வீசுகின்றது. இச் செயற்பாடு தற்பொழுது அடிக்கடி நிகழும் ஒன்றாகி விட்டது. இதற்குக் காரணம் வெப்பநிலை அதிகரிப்பது தான்.

வெப்ப அதிகரிப்பால் மண்வளம் அதிகமாக குறைந்து கொண்டு போகின்றது.  இதனால் வேளாண்மை பாதிக்கப்படுகின்றது. உணவு உற்பத்தியில் வீழ்ச்சி, நன்னீர் மாசடைவு, சுழல் காற்று, அதிகரித்த வெள்ளம், ஆறு ஏரிகளில் தொடர் வெள்ளம், சுற்றாடல் சீர்கேடுகள் காரணமாக இடம் பெறும் இடப்பெயர்வுகள், நதிகள் பல காணாமல் போதல், அத்துடன் பருவமழை காலம் தப்பிப் பெய்தல் போன்ற பல பாதிப்புக்கள் ஏற்படும் என்று பிரிட்டன் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டேவிட்கிங் எச்சரித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளில் கடந்த 10 ஆண்டுகள் மிகவும் வெப்பமுள்ள ஆண்டாகப் பதிவாகியுள்ளன என்றும் கூறியுள்ளார்.

2009.07.18(Climate_change)014

வெப்ப அதிகரிப்பால் மண்வளம் அதிகமாக குறைந்து கொண்டு போகின்றது.  இதனால் வேளாண்மை பாதிக்கப்படுகின்றது. உணவு உற்பத்தியில் வீழ்ச்சி, நன்னீர் மாசடைவு, சுழல் காற்று, அதிகரித்த வெள்ளம், ஆறு ஏரிகளில் தொடர் வெள்ளம், சுற்றாடல் சீர்கேடுகள் காரணமாக இடம் பெறும் இடப்பெயர்வுகள், நதிகள் பல காணாமல் போதல், அத்துடன் பருவமழை காலம் தப்பிப் பெய்தல் போன்ற பல பாதிப்புக்கள் ஏற்படும் என்று பிரிட்டன் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டேவிட்கிங் எச்சரித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளில் கடந்த 10 ஆண்டுகள் மிகவும் வெப்பமுள்ள ஆண்டாகப் பதிவாகியுள்ளன என்றும் கூறியுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் வெள்ளப்பெருக்கு 10 ஆண்டுகளுக்கு இடம்பெறுகின்றது. பூகோளத்தில் காணப்படுவதினைப் போல கடல் நீரிலும் காபனீர்ஒட்சைட் வாயு கலந்துள்ளது. கடல் நீரில் கலந்துள்ள காபனீர்ஒட்சைட்டின் அளவு தற்போது கூடியுள்ளது. கடலில் வெப்பநிலை உயர்வதினால், வாயுக்களை வெளிப்படுத்தத் தொடங்கி விடும். சில வினாடிகளில் பல மில்லியன் தொன் காபனீர்ஒட்சைட் வாயு கடலில் இருந்து பொங்கி வெளிப்பட்டு வளிமண்டலத்தில் கலந்து விட முடியும். இதே போன்று 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்து பல கோடி உயிரிங்கள் முற்றாக அழிவடைந்தது.

2009.07.18(Climate_change)015

முறையற்ற தட்ப வெப்பங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால் காலநிலையானது அடிக்கடி மாற்றமடைகின்றது. இந்த காலநிலை மாற்றமே எதிர்பாராத வெள்ளப் பெருக்குக்குக் காரணமாகும். 2005 ஜூலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு இந்தியத் துறைமுகமான மும்பாயில் நூற்றுக்கணக்கானோரை பலி கொண்டது. வெப்பநிலை உயர்வால் பெரு நகரங்களில் வெப்ப அலை வீசுகின்றது. கோடை காலங்களில் நகரங்களில் 5 பாகை செல்சியஸ் வெப்பம் கூடிக் காணப்படுகின்றது. இதனால் சேரிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நாட்டிற்குள்ளேயே மாறுபட்ட பாரிய காலநிலை மாறுதல்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மும்பாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கிழக்கு மகாராஸ்டிராவில் மக்கள் வரட்சியால் இடம்பெயர்ந்து வந்தனர்.

இலங்கையில் கூட காலம் தப்பி மழை பெய்வதினால் நெற்பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான போகமானது ஒக்டோபரின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும். எனினும் இரண்டு தசாப்தங்களாக பருவம் மாறி மழை பெய்வதினால் ஒக்டோபர் மாத இறுதியில் அல்லது பல மாதங்கள் பிந்தி வேளாண்மை செய்யவேண்டியுள்ளது. சில வேளைகளில் அறுவடைக்காலங்களில் அடை மழை பெய்கின்றது. 2007 மார்ச் மாதம் பெய்த அடைமழை வழமையான மழை வீழ்ச்சியை விட 70 வீத அதிகரிப்பைக் காட்டியது. இம் மழையால் அம்பாறை, மன்னார், மட்டக்களப்பு, பொலநறுவை என்பன வெள்ளத்துள் மூழ்கியது. 2007 நவம்பர் மழையால் யாழ்ப்பாணம், மன்னர், வன்னி உட்பட பல வடக்குப் பகுதிகளைத் தாக்கியது. இதனை விட நீர் வீழ்ச்சிகள், மழைக்காடுகள், தேயிலை வளரும் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. நுவரெலியாவில் தேயிலைச் செடிகளில் பனிப்படிவுகள் அவதானிக்கப்பட்டது. அதனை விட மழைபெய்யும் போது வீட்டுக் கூரைகளில் பனிக்கற்கள் விழும் சத்தத்தைக் கூட மக்கள் அவதானித்துள்ளனர். மார்கழி, தை மாதங்களில் காணப்படும் நுளம்பு, இலையான்களின் தொல்லை மன்னாரில் அண்மைக்காலமாக இரவு பகல் என்று இல்லாமல் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பல அளெகரியங்களை எதிர் நோக்குகின்றனர். 2009. 04. 06 ஆம் திகதி அன்று புசல்லாவையில் அமிலமழைப் பொழிவினை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர் இவை எல்லாம் சாதாரண நடைமுறைக்கு அப்பாற்பட்ட விடயங்களாக நிகழ்ந்து கொண்டு வருகின்றது.

பாகம் – 03  (தினக்குரல் – 25.06.2009  )

இனி வரும் காலங்களில் குளிர் நாடுகளில் குளிர் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ஐரோப்பாவில் எதிர் பாராத விதமாக வெப்ப அலைகள் எழுந்துள்ளன. உதாரணமாக சுவிஸ்லாந்தில் இவ் வெப்ப அலை காரணமாக சிறிது காலம் 5 பாகை செல்சியஸ் வெப்பம் கூடிக் காணப்பட்டது. இங்கிலந்தில் உள்ள வன விலங்குகள் வடக்கு நோக்கி இடம் பெயருகின்றன. சீனாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே இருந்து வரும் காற்று, நீர் மாசடையும் பிரச்சினை, மணல் பாதிப்பு, நீர்ப்பற்றாக்குறை என்பன மேலும் மோசமாகும் என எதிர்பாக்கப்படுகின்றது.

உயிரின பன்முகத்தன்மையில் ஏற்படும் தாக்கம் ஏற்கனவே உணரப்பட்டுள்ளது. பருவம் தப்பிப் பூக்கள் பூக்கின்றன. மண்ணில் உள்ள கிருமிகள் மெதேன் வாயுவை உற்பத்தி செய்கின்றது. வெப்ப நிலை  உயர்வால் அவ்வாறு அடிக்கடி உருவாகும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. தென் ஆசியாவில் உணவு, தானிய மகச்சூழில் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். கென்யாவில் அண்மையில் ஏற்பட்ட பெரு வரட்சியால் பசும் புற்கள் வளர்ப்போர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மலைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாறை வெடிப்புக்கள் ஏற்பட்டதை அறிய முடிகின்றது.

2009.07.18(Climate_change)016

1880 ஆம் ஆண்டுக்குப் பின்பு பூகோள சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல் நீர் வெப்பம் 0.5 பாகை செல்சியஸ் மிகையாகி விட்டது. 2003 இது இரட்டிப்பாகியும் உள்ளது. 1998 ஆம் ஆண்டில் இருந்து 2001 இல் அதிகமான வெப்பம் கூடியுள்ளது. கடலின் வெப்பம் 0.4 பாகை செல்சியஸ்  0.7 பாகை செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் கடலில் காபனீர் ஒட்சைட் கரைந்துள்ளமையாகும்.

சீனாவை உலுக்கிய பூகம்பம், மியன்மாரை விரட்டிய நக்கீர்ஸ் புயல், தொழில் மய நாடுகளை விட வளரும் நாடுகளில் காலநிலை மாற்றம் பல்லுயிரின இழப்பு போன்றவற்றால் மனிதர்களுக்கு இடையே அவதியையும் கடுமையான பாதிப்பினையும் ஏற்படுத்தும். இன்று ஆபத்தினை எதிர் நோக்கியுள்ள நாடுகள் அநேகமாக அரசியல் மாற்றம், குறைந்த பொருளாதார வீழ்ச்சி, அதிக சனத்தொகை ஆகியன காணப்படுகின்றது. இயற்கைச் சூழலில் அதிகமாக பாதிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. உலக உணவு உற்பத்தியானது 40 வீதம் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் உலகில் பாரிய பொருளாதார வீக்கத்தை எதிர் நோக்கவுள்ளது. மேலும் அனைவரினதும் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாது போகும் என்றும், ஜதராபாத்தில் இடம் பெற்ற சர்வதேச விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் ஆலோசனைக் குழுவின் கீழ் இயங்கும் நிறுவனம் நடத்தய கூட்டத்தில் விஞ்ஞானிகள் இதைத் தெரிவித்தனர்.

இந்தோ கங்கைச் சமவெளியிலும் கோதுமை உற்பத்தி பெரிதும் பாதிப்புறும் என மெக்சிக்கோவில் தலைமை அலுவலகத்தினை கொண்டுள்ள சோள அபிவிருத்தி நிலையம் குறிப்பிட்டுள்ளது. கடும் வரட்சியால் பிரேசில், ஸ்ரெப்பீஸ், கனடாவின் வட பகுதி கோதுமை வயல்பாதிப்பு, வடசைபீரியாவில் 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து, 10 வீதம் மழை விழ்ச்சி குறையும். இதனால் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிப்புறும். தானிய உற்பத்தி வீழ்ச்சி ஆபிரிக்காவின் சாகேலிலும் உணரப்பட்டுள்ளது. தென்ஆபிரிக்காவின் வடக்குத் தெற்கு ஓரங்களில் உள்ள நாடுகளிலும், மத்தியதரை பிரதேச நாடுகளும் அதிகம் பாதிப்படையும். இதனை விட பாலைவனங்கள் விஸ்தீரணம் அடைந்து கொண்டு செல்கின்றது. உதாரணமாக சகாரா, மேற்கு அவுஸ்ரேலியா, அரிசோனா, மத்திய ஆசியா, கலகாரி, அற்றகாமா, பற்றக்கோனியா பாலைவனங்களை அண்டிய பகுதிகளில் பாலைவனம் பரவுதல் பெரும் பிரச்சினையாகத் தலையெடுத்துள்ளது.

மத்திய ஆசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கருபியனின் சில நாடுகள், மெச்சிக்கோ, இலத்தின் அமெரிக்காவை அண்டிய அமேசன் பிரதேசங்களில் உணவு உற்பத்தி பெரிதும் பாதிப்புறும். ஏற்கனவே பலவீனமான சோமாலியா, சாட், சூடான் ,நைகர் போன்ற நாடுகளில் வரட்சி, விவசாய வீழ்ச்சி, நீர்ப்பற்றாக்குறை ஆகிய பல மேலதிக அழுத்தங்கள்; ஏற்படும். இதன் விளைவாக சூடான் , சாட்டிலும் அதிகம் பேர் அகதிகளாகுவர். இவ்வாறு ஏற்கனவே வறிய நாடுகளில் பொருளாதார நிலையானது, மேலும் பலவீனமடையும்.

தென்கிழக்காசியாவில் நீர்ப்பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெறுவதால் இப்பிரதேசத்தில் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைமை ஏற்படும். 1972 – 73 இல் இடம் பெற்ற எல்நினோவால் ஆரம்பத்தில் உணரப்பட்டது. அதன் விளைவாக பேரு கடற்கரையோரத்தில் நடைபெற்று வந்த மீன்பிடித் தொழில் அழிந்து போனதுடன் மீன் உணவும் பாதிப்படைந்தது.

உணவாகப் பயன்படும் சிற்பி மீன் நஞ்சாகின்றது. அலாஸ்காக் கடற்கரைப்பகுதியில் இந்த சிற்பி மீன் தற்போது அப்பகுதியில் மிகச் சாதாரணமாகக் கிடைக்கின்றது. அலாஸ்காவின் கடல் நீரின் வெப்பம் பல செல்சியஸ் அதிகரித்து விட்டதால் சிற்பி மீன் வளரும் தளங்களில் தொற்று நோய் நீடிந்து இருப்பதற்கான சூழல் உள்ளது. எல்நினோ சுழற்சியால் அந்தாட்டிக்காவில் கடற்கரை நீர் வெப்பமடைவதால் இவ்வாறு ஏற்பட்டு இருக்கின்றது எனப் பல ஆராட்சியாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த பாரிய பிரச்சினை கடல் நீரில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பனிக்கட்டி உருகல் ஆகும். துருவப்பனியில் சுமார் 450 மில்லியன் காபனீர்ஒட்சைட் வாயு சிக்கியுள்ளது. வட சைபீரியாவின் பனிப்பாறைகளில் மெதேன் வாயு விரைவாகக் வெளியே கசிந்து வருவதாக அலாஸ்கா பல்கழைக்கழகத்தைச் சேர்ந்த கேட்டிவாட்டன்  கண்டுபிடித்துள்ளார்.

அந்தாட்டிக்காப் பகுதியில் அதிகமான வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் பல நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர் பரப்பளவு உடைந்து உருகத்தொடங்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் பனிச் சிகரங்கள் பல சுருங்கி விட்டது. இதே வேகத்தில் பனி உருகினால் வட இந்தியாவில் இமயமலை ஜீவநதிகளைச் சார்ந்து வாழும் பெருமக்கள் கடுமையாகப் பாதிப்படைவர்.

உலக வெப்ப ஏறுதலை அதிகமாக அனுபவித்து வருவது அந்தாட்டிக்கா தான். அது வெப்ப ஏறுதலுக்கான முன்னெச்சரிக்கை மையமாகவும் விளங்குகின்றது. இதன் சிறிய மாற்றமும் உலகின் பருவ நிலைகளையும் காலநிலையையும் குறிப்பிடத்தக்களவு பாதிக்கும் என்பதும் உண்மை. பல ஊசியிலைக்காடுகள் அழிந்து போகும் அபாயம் உள்ளது. 2007 பாரிஸ் அறிக்கையில் பனிக்களஞ்சியம், கிறீன்லாந்தின் பனிப்படிவுகள் பாதிப்புறும் என்றும் கூறப்படுகின்றது.

நாசா நடத்தும் ஆய்வின் ஒரு பகுதியாக மஞ்சள் நிறப் பிளாஸ்டிக் வாத்துக்கள்  அந்தாட்டிக்காப் பகுதியில் மிதக்க விட்டுள்ளனர். இந்த இயக்கத்தினை வைத்து பனிஉருகும் வேகம், உருகி எந்தத் திசையில்  எந்த நாட்டினுள் செல்கின்றது, என்பனவற்றை ஆராய்கின்றனர். இது குறித்து நாசா விஞ்ஞானி அல்பர்டோ பிகார் கூறியிருப்பதாவது, ஜேக்கப் ஸ்கலன் வேகமாக என்று பெயரிடப்பட்டுள்ள பனிப்பாறைகள் உருகும் வேகம் கடந்த சில ஆண்டுகளாக காணப்படுகின்றது. மேலும் கடல்நீரோட்டம் செல்லும் திசையிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது என்றார்.

பாகம் – 04  (தினக்குரல் – 24.06.2009  )

கனடாவின் ஆட்டிக் பிராந்தியப் பகுதியில் உள்ள 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவு பாரிய பனிப்பாறைகள் தகர்க்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2008 இல் அவதானிக்கப்பட்ட இந்த பாறை உடைவானது 2009 இல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என எதிர்வு கூறியுள்ளனர். கனடாவில் வட எல்லைப்பகுதியில் உள்ள பாரிய எல்விஸ்  மெரே தீவுக்கு அப்பாலுள்ள சிறிய தீவான வார்ட் ஹன்ட் தீவிலேயே இந்தப் பாறை உடைவு அவதானிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டின் பின் அயிலெஸ் பனிப்பாறை உடைப்பில் ஏற்பட்ட 25 சதுரமைல் உடைவுக்கு பின் ஏற்பட்ட பாரிய உடைவு இதுவாகும்.

ஜேம்ஸ் லவ்லாக் என்ற விஞ்ஞானி புயயை என்ற ஒரு கொள்கையை வெளியிட்டுப் பூமி தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் உயிரி என்று வர்ணித்தார். அவரே நாம் இப்போது மீள முடியாத வரம்புகளைத் தாண்டிப் போய் விட்டோம் என்கின்றார். இது வரை விஞ்ஞானிகள் தென் துருவத்திலும் வட துருவத்திலும் 2 முதல் 3 கிலோமீற்றர் வரை தடிப்புள்ள நிரந்திரப் பனிப்போர்வைகள் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாக மெல்ல மெல்லத் தான் உருகும் என்றும், அவை முழுவதுமாக உருகப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் நிரந்தர பனிப்படலத்தில் பல விரிசல்கள் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பனிப்பாறைகள் உருகி பனிப்பாளம் வழியாக கீழ் 10 வினாடிக்குள் அடியில் இறங்கி விடுகின்றது. பனிப் பாளங்கள் தரையை விட்டு இறங்கி கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளன. கிறின்லாந்தின் பனியாறுகள் இந்த விதமாகத் தான் கடலை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளன. அத்திலாந்திக் கடலில் விழும் பனியாற்றின் பருமன் 1996 ஆம்

ஆண்டில், ஆண்டுக்கு 100 கன கிலோமீற்றர் என்ற அளவில் இருந்து 2005 இல் 220 கனகிலோமீற்றர்  உடைந்துள்ளது. சைபீரியாவின் வட பகுதியிலும் பனியாறு அதிகளவில் உருகத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலுள்ள வன விலங்குகள் வளிமண்டல வெப்பநிலை உயர்வு காரணமாக வடக்கு நோக்கி குடிப்பெயர்ந்து கொண்டிருக்கின்றது. பனிஉறையும் காலங்களில் கூட கப்பல் போக்குவரத்து சாத்தியமாகும் அளவுக்கு நீர் நிறைந்து இருக்கின்றது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு மாற்றம் தான் எல்நினோ ஆகும். எல்நினோ ஏற்படும் காலங்களில் கூட பூமியில் பாரிய மாறுதல்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் கடல் நீரின் வெப்பமானது சாதாரணமாக ஒரு பாகை செஸ்சியஸ் அதிகரிக்கின்றது. இதுவே எல்நினோ தாக்கத்தின் போது மூன்று பாகை செல்சியஸ் ஆல் அதிகரித்துள்ளது. எல்நினோ என்பது ஸ்பானிய மொழியில் ஒரு ஆண் குழந்தை என்று பெயர். இதை பசுபிக் சமுத்திரத்தில் நிகழும் ஒரு மாற்றத்திற்குப் பெயராகப் பயன்படுத்துகின்றனர்.  ஆரம்பத்தில் எல்நினோ  என்பது ஆண்டு தோறும் கிறிஸ்மஸ் சமயத்தில் பசுபிக் கடலில் எக்குவடோர், பேரு நாடுகளின் கரையோரமாகத் தோன்றும் ஒரு வெப்ப நீரோட்டத்தையே குறித்தது. இந்த நீரோட்டம் சில வாரங்கள் தான் நீடிக்கும். ஆனால் 2 – 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நீரோட்டம் பல மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு நீடிக்கும். உதாரணமாக 1991 இல் உருவான எல்நினோ 1995 வரை நீடித்தது. காலநிலையில் இதனது தாக்கங்கள் உலகளாவியது.

ஒரு சாதாரண வருடத்தில் தாழ்ந்த காற்றழுத்தப் பகுதி அவுஸ்டேலியா, இந்தோனேசியாவுக்கு மேலாகவும், காற்றழுத்த உயர்வுப் பகுதியில் பசுபிக் கடலுக்கு மேலும் தோன்றும். இதன் காரணமாக தென்அமெரிக்காவில் இருந்து அவுஸ்ரேலியாவை நோக்கி காற்று வீசும். கடலின் வெப்பமான மேற்பரப்பு நீரை இக்காற்று தன்னோடு அணைத்துச் சென்று இந்தோனேசியாவிலும் வட அவுஸ்டேலியாவிலும் மழை பொழியச் செய்யும். வெப்பமான மேற்பரப்பு நீரை ஈடுசெய்ய குளிர்ந்த நீர் பசுபிக் கடலின் அடியிலிருந்து எக்குவடோர், பேரு நாடுகளில் நாடுகளின் கரையோரமாக மேற்பரப்புக்கும் இடையில் கடல் நீரின் வெப்பநிலையில் ஏறத்தாழ 10 செல்சியஸ் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

2009.07.18(Climate_change)017

ஆனால் ஒரு எல்நினோ வருடத்தில் வட அவுஸ்ரேலியாவின் மேலே  காற்றழுத்த உயர்வுப்பகுதியிலும் எக்குவடோர், பேரு நாடுகளின் கரையோரத்திலும் காற்றழுத்தம் குறைந்த பகுதிகள் தோன்றும். காற்றழுத்தத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றம் வழமையாக தெற்கு அமெரிக்காவிலிருந்து அவுஸ்ரேலியாவை நோக்கி வீசும் காற்றைக் குறைக்கும். அல்லது மறுபுறமாக வீசவைக்கும். இதனால் எக்குவடோர் பேரு நாடுகளின் கரையோரத்தில் மத்தியகோட்டுப்பகுதியில் வெப்பம் தேங்குகின்றது. வழமையான குளிர்ந்த சத்துள்ள நீர்  கடலடியில் இருந்து மேற்பரப்பிற்கு வர வழியில்லாமல் போகின்றது. இந்தப் பசுபிக் கடலில் பகுதியில் மீன்களின் எண்ணிக்கை இதன் காரணமாக வெகுவாகக் குறையும். பசுபிக்கின் இந்தப் பக்கத்தில் அதாவது அமெரிக்கப் பக்கத்தில் மழைவீழ்ச்சியும் அதன் காரணமாக வெள்ளப்பெருக்கும் அதிகமாகும். முரணாக அவுஸ்ரேலியாவின் பக்கத்தில் மழைவீழ்ச்சி குறைந்து விடும். வரட்சியும் அதன் காரணமாகக் காட்டுத்தீயும் அதிகமாகும். பொதுவாக எல்நினோ நடந்து முடிந்த பின்னர் காலநிலை சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும். ஆயினும் சில ஆண்டுகளில் தென் அமெரிக்காவிலிருந்து அவுஸ்ரேலியாவை நோக்கி வீசும் காற்று மிகப் பலமாக இருக்கலாம் இதனால் பசுபிக்கின் மத்திய மற்றும் கிழக்குப்பகுதியில் வழமையை விட அதிகமான குளிர் நீர் இருக்கும். இந்நிகழ்வை லா நினோ என்பர்.

2009.07.18(Climate_change)018

எல்நினோ உலகளாவிய அளவில் காற்றோட்டங்களில் தாக்கத்தை விளைவிக்கக் கூடியது. பேரு, எக்குடோர் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு, இந்தோனேசியா, அவுஸ்டேலியாவில் வரட்சி போன்றவற்றைத் தவிர உலகின் பல பாகங்களிலும் அசாதாரண காலநிலையைத் தோற்றுவிக்கும். உதாரணமாக 1982 – 83 இல் தெற்கு ஆபிரிக்கா, தெற்கு இந்தியா, இலங்கை , பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வரட்சி பொலுவியா, கியூபா ஆகிய நாடுகளில் வெள்ளப் பெருக்கு ஹவாயில் புயல், 1997 – 1998 இல் ஐரோப்பாவின் பல பகுதிகளில் குளிர்காலத்தில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது.

இப்போது மீண்டும் எல்நினோ ஆரம்பமாகியிருப்பதாகக் கருதப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு எடுத்த வெப்பநிலை அளவுகள் இதையே சுட்டுகின்றன. 1998 ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டு என்று கருதப்படுகின்றது. ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு பிரிட்டனில் மிக வெப்பமான ஆண்டு என அறிவிக்கப்பட்டது. கிழக்கு ஆபிரிக்காவில் வரட்சிக்கும் ஆட்டிக்பகுதியில் அதிகமாக உருகும் பனிப் பாறைகளுக்கும் எல்நினோவும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

2009.07.18(Climate_change)019

இவற்றினை ஒட்டு மொத்தப் பலனாக கடல் மட்டம் உயர ஆரம்பித்துள்ளது. இதனால் கரையோரங்கள் அதிகம் பாதிப்புறும். மிக மோசமாகப் பாதிக்கப்படப் போவது மாலைதீவு ஆகும். 2030 இல் 20 சென்ரிமீற்றர் உம், 2100 இல் 65 சென்ரிமீற்றர் உம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்களாதேசத்தின் மூன்றில் ஒரு பகுதி சமூத்திரத்தினுள் அமிழும் என்றும், யாழ்ப்பாணத்தினை அண்டியுள்ள தீவுகள் நீரினுள் மறையும் அபாயமும் காணப்படும். இதனை விட வடஅவுஸ்டேலியக் கரையோரம், பசுபிக்கின் பல தீவுகள், கரூபியன் கடற்கரை, கினிகுடாக்கரை என்பனவும் பாதிப்புறும். 2 மீற்றருக்கு மேல் தேம்ஸ் ஆற்றுப்படுக்கை வெள்ளக் கட்டுப்பாட்டை மீறி உயர்வதினால் அமெரிக்க கடல் பகுதியில் மியாமி நகரத்தை அது மூழ்கடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை விட பல கழிமுகங்கள் பாதிப்புறும்.  உதாரணமாக கங்கைக் கழிமுகம், நைல்நதிக் கழிமுகம், யாங்ரிசி கழிமுகம், செந் நதிக் கழிமுகம், மீக் கொங் கழிமுகம் என்பன பெரிதும் பாதிப்புறும். இலங்கையில் கூட  பல கடற்கரைகள் கடலில் அழிழும் அபாயமும் உள்ளது. காலி, கிண்ணியாவை அண்டிய பகுதிகள் முதலில் பாதிப்புறும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2009.07.18(Climate_change)020

அண்மையில் கூட இந்தியாவின் கன்னியாக் குமரிக்கடலில் திடீர் என்று பெரும் அலைக் கொந்தளிப்பொன்று ஏற்பட்டது. அது 10-15 அடி வரை உயர்ந்து அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதே வேளை கடலூர் தேவனம் பட்டினம் சில்வர் கடற்கரையில் கடல் நீர் ஊருக்குள் புகுவது கண்ணுக்கு எட்டிய வரையில் மிகவும் தெட்டத்தெளிவாகக் காணக்கூடிய ஒன்றாக இன்று உள்ளது.

2009.07.18(Climate_change)021

8000 ஆம் ஆண்டுகளிற்கு முன்னர் நோர்வே கடற்கரைப்பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவு செட்லாண்ட், ஸ்கொடலாண்ட் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் 20 மீற்றர் உயரமான சுனாமிப் பேரலை உருவாக்கியது. அப் பகுதிகளில் உள்ள அடிமட்டப் பனிப்படிவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வட அந்தாட்டிக்காப் பகுதியும் பாதிப்படைந்தது.

2009.07.18(Climate_change)022

காலநிலை மாற்றத்தால் நோய்க்கிருமிகள் பரவச் செய்கின்றது. உலக வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க முன்பு குளிர்காலங்களில் மட்டுமே உற்பத்தியான மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் ஆகியவற்றைப் பரப்பும் நுளம்புகள் தற்போது வெப்பமான வானிலைக் நுளம்புகளின் வாழ்நாளைக் குறைத்தாலும் ஒரு வருடத்தில் உருவாகும் அதன் எண்ணிக்கை 2 மடங்காகியுள்ளது. முதிர்வதற்குக் குறைந்த காலமே தேவைப்படுவதினால் அதிக நுளம்புகள் உருவாகி அவை தங்களது இனப் பெருக்கத்துக்குத் தேவையான இரத்தத்தைத் தேடிக் கொண்டு வருகின்றது என்றும் இந்தோனேசியாச் சுகாதாரப் பணிப்பாளரான மிருக எலும்பு நோய்ப்பிரிவு இயக்குனர் எர்னா டிரிஸ்னானிங்கா தெரிவித்துள்ளார்.

எமது சூழலை மாசுபடுத்துவதன் ஒரு விளைவை இன்று இலங்கை அனுபவித்துக் கொண்டுள்ளது. டெங்கு நோய்களின் பெருக்கத்தால் நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றது. அது மட்டுமன்றி பன்றிக் காய்ச்சலுக்கான வைரசுக்கள் கூட பெருக ஏதுவாக இக் காலநிலை மாற்றம் பெரும் பங்கு வகிக்கின்றது.

வெப்பநிலை அதிகரிப்பால் அதிகமானவர்கள் இறக்க நேரிடும். பலர் புகைபிடிக்காமலே சுவாசப் புற்று நோய்க்கு ஆளாகின்றனர் என்று பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகமும், மற்றும் வானிலை ஆராட்சி நிறுவனமும் இணைந்து நடாத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. நில மேற்பரப்பில் அதிகமாக மாரடைப்பு, சுவாசக் கோளாறுகள் ஏற்படும். சளி, ஆஸ்மா, லைம்நோய், ரீக்பட், வேலிசும், டைபோயிட், இரத்தத்தினை உறைய வைத்தல் போன்ற நோய்களும் உண்டாகின்றது என்று அவுஸ்ரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் தலைவர் மெக்மைக்கேல் கூறுகின்றார். உலகின் வெப்பமான பகுதிகளில் மட்டும் பரவி வந்த மலேரியா தற்போது கிழக்கு ஆபிரிக்கா மேட்டுப்பகுதிகளில் தற்போது பரவுகின்றது, சிஸ்டோ சேமியா என்ற தண்ணீர் நத்தையால் சீனாவின் வடக்கில் தொற்று நோய்கள் பரவுகின்றன. நீலகிரியில் காலநிலைச் சமநிலையின்மையால் காலை முதல் மாலை வரை மாற்றங்கள் அவதானிக்கப்படுகின்றது. திடீர் மழைகள் ஏற்படுகின்றது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கையினை காலநிலை மாற்றம் பெரிதும் பாதிக்கும். இதனால் நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் அதிகம் பாதிப்படையும். அந்தாட்டிக்காவில் உயிரின அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளது.  பூகோள வெப்பமேற்றத்தால் நிலத்திலும் கடலிலும் 280 உயிர்ப்பல்லினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு இரண்டு நாட்கள் வீதம் முந்தி வரத்தொடங்கியுள்ளது.

உலகில் சிறுபான்மைக் குழுக்களும் , பூர்விகக் குடிகளுமே சத்தமின்றி பாதிக்கப்டுகின்றனர். இவர்கள் இயற்கையுடன் ஒன்றினைந்து வாழ்வதினால் மாற்றம் குறித்து இலகுவில் எதிர்வு கூறுகின்றனர். இதனை விட வரண்ட பகுதிகள் கூடிக் கொண்டே செல்கின்றது. ஆபிரிக்கா, பிரேசிலின் கிழக்குப் பகுதி, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளில் வரண்ட பகுதிகள் அதிகரிக்கலாம். சகாராவுக்குத்  தெற்கேயுள்ள புல்வெளிகள் அழிந்து போகலாம் என எதிர்வு கூறுகின்றது. காட்டுத்தீயானது 30 – 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இடம் பெறும். ஆனால் தற்போது 5 – 10 வருடச்சுழற்சியில் ஏற்பட்டு வருகின்றது. நீரியல் வட்டம் பாதிப்புறும். அதிகரித்த வெப்பத்தினால் மண், நீர் நிலைகள் பாதிப்புறும். இதனால் கடல் வாழ்உயிரினங்களின் வாழ்க்கை பாதிப்புறும். நீர்நிலைகள் வற்றுவதால் நீர்மின் உற்பத்தி பாதிப்படையும். அத்துடன் கடல் மட்ட உயர்வு காரணமாக கடல்நீர் நிலமேற்பரப்பினை அடைவதால் நன்னீர் உவர்நீராக மாற்றமடையும் அபாயமும் உள்ளது.

அண்மையில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் படி, இக் காலநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கையில் பல பாதிப்புக்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இதனால் உலகின் பல நாடுகள் அதிகம் பாதிப்புறும் என்றும், வளர்ந்து வரும் நாடுகள் இவ்வழிவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களைத் தயாரிப்பதில் இன்னும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் செல்வந்த நாடுகள் அவற்றிற்கு உதவுவதுடன், தொழில் மயமாக்கல் மூலம் தான் இவ்விளைவுகள் ஏற்படுகின்றது என்பதை இந் நாடுகள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கூற்பட்டுள்ளது.

பூகோள சூடேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.

காலநிலை மாற்றத்தினால் ஒரு சங்கிலிக் கோர்வையான விளைவுகளை பூமி எதிர்நோக்கியுள்ளது. இனியும் எதிர்நோக்கும்.  உலக நாடுகள் பலவற்றினதும் சூழல் பாதுகாப்புச்சபையினர் பூகோள வெப்பமாதலை தடுக்குமாறு குரல் எழுப்பி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டில் றியடிஜெனிரோவில் இடம் பெற்ற மாநாட்டிலும், 1998 இல் புவனஸ்அயர்ஸ் இல் இடம்பெற்ற மாநாட்டிலும் காபனீர்ஒட்சைட்டை 2010 இல் 5.2 வீதமாக குறைப்பதற்காக 38 கைத்தொழில் நாடுகள் ஒப்பமிட்டுள்ளன.

2009.07.18(Climate_change)023

பாகம் – 05  (தினக்குரல் – 29.06.2009  )

காலநிலை மாற்றமானது உலகளாவிய பிரச்சினை எனவும் இதற்கு சர்வதேச ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துப் போராடுவது 21 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய அமைதிக் கொள்கையாகும். ஐ.நா சுற்றாடல் திட்டப்பிரிவு  உட்பட சர்வதேச நிபுணர்களினும் ஸ்தாபனங்களினதும் செயற்பாடுகளிலிருந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. உலகுக்கும், சமுதாயங்களுக்கும், நாடுகளுக்கும் பல சுற்றாடல் சவால்கள் தோன்றியுள்ளன என ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டமிடலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எசிம் ஸ்ரீனரை மேற்கோள் காட்டி அப்பிரிவு வெளியிட்ட குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளன.

மாலைதீவு காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தலைநகர் மலேயைச் சுற்றி சூழ 60 மில்லியன் டொலர் செலவில் கொங்கிரிட் மதில் அமைப்பது, கடல் மட்டத்துக்கு மிகவும் மேல் நிற்கக் கூடியதான ஒரு செயற்கைத் தீவை உருவாக்குவது போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் சூழல் திட்டத்தின் நிர்வாகப்பணிப்பளர் அகிம் ஸ்ரெயினர் உலகளாவிய ரீதியில் காபனீர்ஒட்சைட் வெளியேற்றத்தால் பல நாடுகள் அழிவை எதிர்நோக்குவதற்கு முன்னர் தடை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஜெரிரால்பொற் காலநிலை மாற்றத்தின் சமூக அம்சங்கள் பற்றிய மேலதிக ஆய்வு வேண்டும் என்றும் மேலும் காலநிலை மாற்றத்தை உலகளாவிய சமூக நீதி சம்மந்தமான விடயமாக்கும் தேவை  உண்டெனவும் தனிப்பட்ட குழுக்களின் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும் எனினும், காலநிலை மாற்றத்தினால் சமூக ரீதியான தாக்கங்களை எதிர் கொள்ள பலமான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றார்.

2009.07.18(Climate_change)024

இந்தோனேசியத் தீவான பாளியில் விஞ்ஞானப் பொருளாதார துறைகள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.நா வின் காலநிலை மாற்ற மாநாட்டில் பூமி வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய மற்றுமொரு பாரதூரமான விளைவு குறித்து புதியதொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாயுவெளியேற்றத்தை குறைப்பதற்கான திடமான கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு, பாளியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட அரசாங்கங்களிடம்  ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பிரிவு வலியுறுத்தியுள்ளது. அபிவிருத்தி மிகக் குன்றிய 50 நாடுகள் காலநிலை மாற்றங்களினை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா அனுசரணையுடன் தேசிய செயற்றிட்டம் ஒன்றை தயாரித்து வருகின்றது. புவியின் காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா அமைப்பினால் வருடாந்தக் கூட்டம் ஆஜன்ரினாவின் தலைநகரான புவனஸ்அயர்சில் நடந்து வருகின்றது. இதில் 10 ஆண்டுகளுக்கான திட்டங்களை முன்வைத்துள்ளது.

பூமியின் சமநிலையில் குழப்பங்களை ஏற்படுத்துவதினால் நாம் பாரிய விளைவுகளை எதிர்  நோக்க வேண்டியிருக்கும். இன்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை பூமி எதிர் நோக்கிக் கொண்டுள்ளது, இதற்கு நாம் ஒவ்வொருவரும் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. எமது சூழலை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணிச் செயற்பட்டாலே பூமியைப் பாதுகாக்க முடியும். எனவே, அனைவரும் காலநிலை மாற்றம் குறித்த அறிவினைப் பெறுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

து.ரஜனி    Rajani Thurai

தொடர் கட்டுரை – தினக்குரல் 23.06.2009 முதல் 29.06.2009 வரை – Thinakkural –  e-paper


Advertisements